போலி பாஸ்போர்ட் பெற உடந்தையாக இருந்த சேதுபாவாசத்திரம் காவல் நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம்

போலி பாஸ்போர்ட் பெற உடந்தையாக இருந்த சேதுபாவாசத்திரம் காவல் நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம்
Updated on
1 min read

தஞ்சாவூர்: போலி ஆவணங்கள் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு பாஸ்போர்ட் பெற்று வழங்கப்பட்ட சம்பவத்தில் உடந்தையாக இருந்ததாக சேதுபாவாசத்திரம் காவல் நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், தனிப் பிரிவுதலைமைக் காவலர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் இருந்து, இலங்கைத் தமிழர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று, விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தஞ்சாவூர் மாவட்ட க்யூ பிரிவு போலீஸாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.

இதுகுறித்து க்யூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியபோது, போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று, இலங்கைத் தமிழர்கள் 28 பேருக்கு வழங்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள ஆண்டிக்காடு கிராம அஞ்சலக ஊழியர்கோவிந்தராஜ்(64), கும்பகோணம் வடிவேல் (52), ராஜு(31), ராஜமடம் சங்கர்(42), சேதுபாவாசத்திரம் காவல் நிலைய தற்காலிக கணினி ஆபரேட்டர் பாலசிங்கம் (36), திருச்சி கல்கண்டார்கோட்டை வைத்தியநாதன் (52) ஆகிய 6 பேரை கடந்த 13-ம் தேதி போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

மேலும், மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அஞ்சல் ஊழியர் பக்ருதீன், திருச்சி உறையூரைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்சுந்தர்ராஜ் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற உடந்தையாக இருந்ததாகக் கூறி, சேதுபாவாசத்திரம் காவல் நிலைய எழுத்தர் சேஷாவை(42) பணியிடை நீக்கம் செய்தும், தனிப் பிரிவு தலைமைக் காவலர்சச்சிதானந்தத்தை(40) பணியிலிருந்து விடுவித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in