Published : 17 Dec 2023 05:42 AM
Last Updated : 17 Dec 2023 05:42 AM
மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி பகுதியில் நீர்வளத் துறைஅதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பை நிறுத்திய பிறகு, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன்காரணமாக நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதேநேரத்தில் பருவமழை பெய்து வருவதால், வரும் நாட்களில் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.
இந்நிலையில், நீர்வளத் துறை நிர்வாகப் பொறியாளர் சிவக்குமார், உதவி செயற் பொறியாளர் செல்வராஜ், உதவிப் பொறியாளர் சதீஷ் ஆகியோர் மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கியில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
16 கண் மதகுகள்... அணையின் உபரி நீர் போக்கியான16 கண் மதகுகளை இயக்கி பரிசோதனை செய்தனர். தொடர்ந்து, மதகுகளில் உள்ள சங்கிலிகளுக்கு ஆயில் ஊற்றப்பட்டு, மதகுகளில் உள்ள சிறியஅளவிலான பாதிப்புகள் சரிசெய்யப்பட்டன.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 2,371 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 2,753 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 250 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 69.87 அடியாகவும், நீர் இருப்பு 32.58 டிஎம்சியாகவும் இருந்தது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 14-ம்தேதி விநாடிக்கு 3,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து 15-ம் தேதி காலை 4,000 கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில், நேற்றுகாலை விநாடிக்கு 3,000 கனஅடியாக நீர்வரத்து குறைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT