Published : 17 Dec 2023 04:00 AM
Last Updated : 17 Dec 2023 04:00 AM
சென்னை: ‘மிக்ஜாம்’ புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேளச்சேரியில் இன்று தொடங்கி வைக்கிறார்.
சென்னை சைதாப்பேட்டையில் மழை வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.6,000 உதவித் தொகை வழங்குவதற்கான டோக்கன் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அரிசி அட்டைதாரர்களுக்கு 100 சதவீதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. சர்க்கரை அட்டைதாரர்களுக்கு பாதிப்புகளுக்கு ஏற்ப வழங்கப்படும்.
வருமான வரி செலுத்துவோர்: வருமான வரி செலுத்துவோருக்கு உதவித் தொகை வழங்க வேண்டாம் என்று முதலில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், வருமான வரி செலுத்துவோரும், பாதிப்பு கூடுதலாக இருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அதேபோல, சர்க்கரை அட்டை வைத்திருப்போரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி, சர்க்கரை அட்டையாக இருந்தாலும், வருமான வரி கட்டுபவராக இருந்தாலும் பாதிப்பு கூடுதலாக இருக்கும் விவரத்தை பூர்த்தி செய்து, ரேஷன் கடைகளில் கொடுத்தால், அவர்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல, வருமான வரி செலுத்தக் கூடிய, உயர் வருவாய் பிரிவினர் நிவாரணம் கோரி விண்ணப்பிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
வேளச்சேரியிலுள்ள சக்தி விஜயலட்சுமி நகரில் பயனாளிகளுக்கு இன்று காலை 10 மணிக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் கொடுக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். உயிரிழப்புகளுக்கு ரூ.5 லட்சம் வழங்கவும், கால்நடைகள் பாதிப்பு, படகுகள் சேதம் ஆகியவற்றுக்கு எவ்வளவு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது தொடர்பாகவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நிவாரணத் தொகை வழங்கப்படும்.” இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT