

சென்னை: மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சென்னையை அடுத்த மணலியில் சிபிசிஎல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால், கரும்புகை வெளியேறி அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சி அளித்தது.
உடனடி நடவடிக்கை: தீ விபத்து ஏற்பட்டதும், முன்னெச்சரிக்கையாக நிறுவனத்தில் உள்ள தீயணைப்பு உபகரணங்கள் மூலம் தீயை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்த எண்ணெய் கழிவுகளில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தால் நிறுவனத்தின் சுத்திகரிப்பு மற்றும் விநியோ கத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
மக்கள் அச்சம்: ஏற்கெனவே, ‘மிக்ஜாம்’ புயலின் போது ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், இந்நிறுவனத்தில் இருந்து வெளியேறிய எண்ணெய் கழிவுகள் மணலி முதல் எண்ணூர் முகத்துவாரம் வரை பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், இந்த தீவிபத்து அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.