Published : 01 Jan 2018 09:29 AM
Last Updated : 01 Jan 2018 09:29 AM

தேர்தல் களத்தில் ரஜினியை சந்திப்போம்: கமல்ஹாசன் ரசிகர்கள் கருத்து

ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து கமல்ஹாசனின் ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவ ரம் வருமாறு:

செந்தில்குமார் (திருநெல் வேலி மாவட்ட கமல் நற்பணி மன்ற பொறுப்பாளர்):

அரசியலுக்கு வருவதாக 20 ஆண்டுகளுக்கு மேலாக பேசப்பட்ட ரஜினி இப்போதுதான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் கமல் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தி உள்ளார். கமல் நிச்சயம் அரசியலுக்கு வருவார். விரைவில் அதற்கான அறிவிப்பை வெளியிடுவார். அனைத்து மாவட்டங்களிலும் எங்கள் அரசியல் களப்பணிகளை ஏற்கெனவே தொடங்கிவிட் டோம்.

ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம். தேர்தல் களத்தில் ரஜினியை சந்திப்போம். ரஜினி – கமல் இடையே ஆரோக்கியமான அரசியல் போட்டி இருக்கும்.

சந்தானம், சேலம் ஒன்றிய கமல் நற்பணி மன்ற பொறுப்பாளர்:

ரஜினியை போன்றவர் அல்ல கமல். நீண்ட நெடிய ஆழமான அடித்தளம் அமைத்து அரசியலுக்கு வந்துள்ளவர் கமல். அவருக்கு போட்டியாக நிச்சயம் ரஜினிகாந்த் இருக்க முடியாது. 1984-ல் கோவையில் ஈழத்தமிழருக்காக மாநாடு நடத்தியவர் கமல். மக்களிடமும், கல்லூரி மாணவர்களிடம் நடத்திய கருத்து கணிப்புகள் கமலுக்கு ஆதரவு இருப்பதை தெரிவித்துள்ளன. எனவே, மக்கள் ஆதரவுடன் ஜனவரியில் கட்சியை அறிவித்து வெற்றிகரமான அரசியலை தொடங்குவார் கமல்.

கண்ணன், சேலம் ஆண்டிப்பட்டி கமல் ரசிகர் நற்பணி மன்ற பொறுப்பாளர்:

ரஜினி அரசியலுக்கு வருவது வரவேற்ககத்தக்கது. ஆனால், இன்றைய அரசியல் சூழ்நிலையில் துணிச்சலான, கோபம் கொண்ட அரசியல் தலைவர் தேவை. அது கமல்ஹாசன் மட்டுமே.

கிராமங்களை குறிவைத்து அரசியலில் இறங்குவதாக ரஜினி கூறுகிறார். எம்ஜிஆர் பாணி அரசியல் அங்கு தான் எடுபடும்.

மக்களின் அறியாமையை பயன்படுத்திக்கொள்ள ரஜினி நினைக்கிறார். மக்களுக்காக செயல்பட்டு வருவது யார்? என்பதை மக்கள் தெளிவாக அறிந்து வைத்துள்ளனர்.

ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றி, இலங்கை தமிழர் பிரச்சினை, ஜல்லிக்கட்டு பிரச்சினை, ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு என மக்களுக்காக குரல் கொடுத்து வருபவர் கமல். இதை மக்களிடம் நடத்தப்பட்ட பல சர்வேக்கள் உறுதிபடுத்தி உள்ளன.

விநாயகமூர்த்தி (துணைத் தலைவர், வேலூர் மாவட்ட கமல் ரசிகர் மன்றம்):

ரஜினி அரசியலுக்கு வருவதை எங்கள் தலைவர் வரவேற்றதை நாங்களும் வரவேற்கிறோம். ரஜினி 100 சதவீதம் அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்த வேண்டும். படத்தை ஓட்டுவதற்காக மட்டும் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறக்கூடாது.

ஆரம்பத்திலே அரசியல் கட்சியினரை விமர்சிக்க வேண்டாம் என்று கூறுவது சரியான நிலைப்பாடாக இருக்காது. அரசு தவறு செய்யும்பட்சத்தில் சரியான நேரத்தில் விமர்சிக்க வேண்டும். விமர்சனமே செய்யாமல் நேரடியாக மக்கள் மன்றத்தில் ரஜினியால் அரசியலை கொண்டுசெல்ல முடியாது. மக்கள் வாக்களிக்கிறார்கள் என்ற சமூக உணர்வோடு ரஜினி அரசியலில் செயல்பட வேண்டும்.

மதுரை மாவட்ட ரசிகர்கள்

ஏ. பிரபாகரன் (பசுமலை):

ரஜினியின் அரசியல் அறிவிப்பை வரவேற்கிறேன். ஆனால் இன்னும் அவர் குழப்பமான சூழ்நிலையிலேயே உள்ளார். அவர் எப்போது வேண்டுமானாலும் தன் முடிவை மாற்றிக் கொள்ளலாம். கமல் அரசியல் அறிவிப்பை வெளியிட்டதால்கூட தற்போது ரஜினியும் தன் அரசியல் நிலைப்பாட்டை அறிவித்திருக்கலாம்.

ஜெ.பார்த்தசாரதி (பெத் தானியாபுரம்):

ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சி ஆரம்பிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ரஜினி தன் கட்சியையோ, கட்சி பெயரையோ இன்று அறிவிப்பார் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தோம். அறிவிக்கவில்லை.

மதம், சாதி இல்லாமல் ஆன்மிகமே இல்லை. ஆனால் மதம், சாதி இல்லாத ஆன்மிக அரசியலில் ஈடுபட போவதாக ரஜினி அறிவித்திருப்பதே அவரது முதல் தோல்வி.

தன் பிறந்தநாளுக்கு இமயமலை ஆன்மிகத்தை தேடிய ரஜினியை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என தெரியவில்லை.

தேர்தல் வாக்குகளை மட்டுமே குறிவைக்கிறாரே தவிர மக்கள் பிரச்சினைகளை பற்றி பேசவில்லை. கார்ப்பரேட் பிரச்சினைகளால் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை பற்றியும் அவர் பேசவில்லை.

அவர் தெளிவான சிந்தனையோடு இருந்தால் மிக நல்லது.

கே.மோகனபிரியா (திருப் பாலை):

அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவே கமல் விரும்பி அரசியலுக்குள் வந்தார். யாரும் கட்டாயப்படுத்தவில்லை.

ஆனால் ரஜினியோ பிறரின் கட்டாயத்தின் பேரிலேயே தற்போது அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். மற்றவர்களின் விமர்சனத்துக்கு பயந்து தான் அவர் தற்போது அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள் ளார்.

‘நம்மவர்’ பாபு, விழுப்புரம் மாவட்ட கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் பொறுப்பாளர்:

விஸ்வரூபம் 2 பாகத்துக்கான படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்துகொண்டுள்ளது. ஜனவரி முதல்வாரத்தில் அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்பை வெளியிடுகிறார். இதில் மாற்றம் இல்லை.

இது தொடர்பாக நிர்வாகிகள் சந்திப்பு நடந்துகொண்டுள்ளது. மேலும் வேறு வேலையும் செய்துகொண்டுள்ளோம். அதனை இப்போது வெளிப்படையாக சொல்ல முடியாது. கமலும், ரஜினியும் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை. ரஜினியின் கொள்கை வேறு. கமலின் கொள்கை வேறு. அப்படி இருந்திருந்தால் இருவரும் பேசி இருப்பார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறியுள் ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x