

நாகப்பட்டினம் / தஞ்சாவூர் / திருவாரூர்: தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, நாகை மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து மிதமான மழை பெய்தது. மேலும், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், நாகையில் கடல் கடும் சீற்றமாக காணப்பட்டது. இதனால், கடந்த 2 நாட்களாக பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தொடர் மழை காரணமாக நாகை புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கியது.
மீன், காய்கறி விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் மழை காரணமாக வியாபாரம் பாதித்ததாக வேதனை தெரிவித்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் இரவு வரை மழை அவ்வப்போது விட்டு, விட்டு பெய்தது. மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தஞ்சாவூர் மாநகரில் தெற்குவீதி, கீழவீதிகளில் மழைநீரும், கழிவுநீரும் கலந்து சாலையில் வழிந்தோடியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் இருந்ததால், நடவு செய்யப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிர் தண்ணீர் இல்லாமல் வாடிய நிலையில் நேற்று பெய்த மழை நெற்பயிருக்கு பெரிதும் உதவியது. இதேபோல, நாஞ்சிக்கோட்டை, வல்லம், மருங்குளம், குருங்குளம் உள்ளிட்ட மானாவாரி பகுதிகளில் பெய்த மழை, கார்த்திகை பட்டத்தில் விதைக்கப்பட்ட நிலக் கடலைக்கு பெரும் பயன் அளித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று மிதமான மழை பெய்தது. இந்த மழை காரணமாக, சம்பா நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.