Published : 29 Jan 2018 08:57 AM
Last Updated : 29 Jan 2018 08:57 AM

சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்திய எண்ணூர் எண்ணெய் கசிவு பேரிடர்: ஓராண்டு ஆகியும் தடுப்பு திட்டங்களை அரசு உருவாக்கவில்லை - பாதிக்கப்பட்ட 1 லட்சம் மீனவர்களுக்கும் நிவாரணம் கிடைக்கவில்லை

மாபெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்திய எண்ணூர் எண்ணெய் கசிவு பேரிடர் ஏற்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அதுபோன்ற பேரிடரைத் தடுக்கும் திட்டங்களை அரசு இதுவரை உருவாக்கவில்லை. பாதிக்கப்பட்ட 1 லட்சம் மீனவர்களுக்கும் நிவாரணம் கிடைக்கவில்லை.

கடந்த ஆண்டு ஜனவரி 28 அதிகாலை 3.45 மணி அளவில் எண்ணூர் துறைமுகம் அருகே பி.டபிள்யூ. மேப்பில், டான் காஞ்சிபுரம் ஆகிய இரு கப்பல்கள் மோதிக்கொண்டன. இதில் டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்த பெட்ரோலிய எண்ணெய் கடலில் கசிந்தது.

தமிழக அரசு சார்பில் கணக்கெடுப்பு நடத்தி, 30 ஆயிரம் மீனவர்கள் பாதிக்கப்பட்டதாக அறிவித்து, அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க, ரூ.15 கோடி ஒதுக்கியது.

பாதிக்கப்பட்ட மீனவர்களை முறையாக கணக்கெடுக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மீனவ அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதன் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வில் எண்ணெய் கசிவால் 1 லட்சத்து 11 ஆயிரம் மீனவர்கள் பாதிக்கப்பட்டதும், இந்த கப்பல் விபத்தில் 251 டன் எண்ணெய் கசிந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மனிதத் தவறுகளே காரணம்

வழக்கில மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

இரு கப்பல்களிலும் ‘அவுட் லுக்’ எனப்படும் கடலில் ஏற்படும் அபாயங்கள் மற்றும் எதிரில் வரும் கப்பல்களை கண்காணிக்கும் வசதிகள் முறையாக இல்லை. ‘அவுட்லுக்’ பணியில், அனுபவம் இல்லாத பயிற்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வேறு பணிகளும் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளன. இரு கப்பல்களும் மோதிக்கொள்வதைத் தவிர்க்க, நங்கூரத்தைப் பயன்படுத்தித் தடுக்கும் வாய்ப்பை இரு கப்பல்களும் தவறவிட்டுள்ளன. கப்பல்களை இயக்கியவர்களும், ‘அவுட்லுக்’ பணியில் ஈடுபட்டவர்களும், அருகில் வேறு கப்பல் வருவதை, கப்பலின் தலைமை அதிகாரிக்கு தெரிவிக்கவில்லை.

எண்ணெய் கசிவு ஏற்பட்டபோது, டான் காஞ்சிபுரம் கப்பல் அதிகாரிகள், முதலில் 2 டன் எண்ணெய் மட்டுமே கசிந்ததாக தவறாக மதிப்பிட்டுவிட்டனர். கசிவு ஏற்பட்ட எண்ணெயின் அளவை மதிப்பிடுவதிலும் கவனக்குறைவு இருந்துள்ளது. எனவே இந்த கப்பல் விபத்துக்கு மனிதத் தவறுகளே முக்கிய காரணமாக உள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

எண்ணெய் கசிவு விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகள் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:

மேலாண்மைத் திட்டம்

தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் துறைமுக எல்லைக்குள் ஏற்படும் எண்ணெய் கசிவைக் கட்டுப் படுத்த பல்வேறு திட்டங்கள் இருந்தாலும், துறைமுகத்துக்கு வெளியில் ஏற்படும் எண்ணெய் கசிவை எதிர்கொள்ள, எண்ணெய் கசிவு மேலாண்மைத் திட்டம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எண்ணெய் கசிவு மேலாண்மை திட்டம் உருவாக்கப்பட்டு, வல்லுநர் குழு அரசிடம் அறிக்கை அளித்தது. அதை அரசு கண்டுகொள்ளவே இல்லை. கடலில் இருந்து அகற்றப்பட்ட எண்ணெயை உயிரி தொழில்நுட்பத்தில் மக்கச் செய்யும் நடவடிக்கையும் மிகமோசமான நிலையில் உள்ளது. அது குறித்து அரசுக்கு நிபுணர் குழு தெரிவித்தும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.

எண்ணெய் கசிவு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்ற பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை. மீனவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x