மாற்ற வேண்டிய கட்டாயத்தில் கோவை மாவட்ட நீதிமன்ற வளாகம்
கோவை: கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகமானது சுமார் 7.17 ஏக்கர் பரப்பளவில், தற்போது 43 நீதிமன்றங்களுடன் செயல்பட்டு வருகிறது. இதுபோக, நீதிபதிகளுக்கான அறைகள், கோப்புகள் வைப்பறை, அரசு வழக்கறிஞர்களுக்கான அறைகள், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, மாற்றுமுறை தீர்வு மையம், வழக்கறிஞர்கள் சங்க அலுவலகம், வழக்கறிஞர்களுக்கான அறைகள், அலுவலக பணியாளர்களுக்கான அறைகள் என காலியிடமே இல்லாத வகையில் நெருக்கடிக்கு மத்தியில் இயங்கி வருகிறது இந்த வளாகம். சுமார் 4,000 வழக்கறிஞர்கள் இங்குள்ள பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்தி வருகின்றனர்.
அதுபோக, சட்ட மாணவர்கள், வழக்காடிகள், நீதிமன்ற பணியாளர்கள் என தினந்தோறும் சுமார் 10 ஆயிரம் பேர் இங்கு வந்து செல்கின்றனர். இவர்கள் வாகனங்களை நிறுத்தக்கூட போதிய இடவசதி இல்லை. எனவே, தேவையை கருத்தில்கொண்டு அனைத்து வசதிகளுடன் புதிதாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை அமைக்க தமிழக அரசு மாற்று இடத்தை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதுதொடர்பாக, கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தின் (சிபிஏ) தலைவர் கே.எம்.தண்டபாணி, செயலாளர் கே.திருநாவுக்கரசு ஆகியோர் கூறியதாவது: தமிழகத்திலேயே கோவையில்தான் மிகக் குறைந்த பரப்பளவில் மாவட்ட நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது.
தற்போதுள்ள கட்டிடங்களில் இருந்த கழிப்பறைகள், வழக்காடிகள், வழக்கறிஞர்கள் காத்திருக்க ஒதுக்கிய இடங்கள் எல்லாம் புதிய நீதிமன்றங்கள் தொடங்க கட்டாயம் ஏற்பட்டபோது, அவை நீதிமன்ற அறைகளாக மாற்றப்பட்டுவிட்டன. தற்போது இங்கு வரும் அனைவருக்கும் போதிய கழிப்பறை வசதிகள்கூட இல்லை. 7 நீதிமன்றங்கள், இங்குள்ள பாரம்பரியம்மிக்க பழமையான கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. அந்த கட்டிடத்தை புனரமைத்து, பராமரிக்க வேண்டியிருப்பதால், கட்டிடத்தை தங்கள் வசம் ஒப்படைக்குமாறு பொதுப்பணித்துறையினர் மாவட்ட நீதிமன்ற நிர்வாகத்திடம் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். ஆனால், அங்குள்ள நீதிமன்றங்களை தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்ற, தகுந்த இடத்தை தேர்வு செய்ய முடியாத நிலையே நீடித்து வருகிறது.
வணிக வழக்குகளுக்கான நீதிமன்றம்.
கோவை மத்திய சிறைச்சாலை வளாகம் சுமார் 165 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள சிறைச்சாலையை வேறு இடத்துக்கு மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், அங்கு முதற்கட்டமாக 45 ஏக்கரில் செம்மொழி பூங்கா அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள இடத்தில், 30 ஏக்கரை புதிதாக ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் அமைக்க தமிழக அரசு ஒதுக்கி, அங்கு அனைத்து அத்தியாவசிய வசதிகளுடன் பல அடுக்குகள் கொண்ட கட்டிடத்தை கட்டி நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். இதுதவிர, உயர் நீதிமன்றத்தின் கிளை நீதிமன்றத்தை கோவையில் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை உள்ளது. இதற்கு உயர் நீதிமன்ற நிர்வாகமும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கான வசதிகள் இருந்தால்தான் அவ்வாறு கிளையை அமைக்க முடியும். எனவே, தமிழக அரசு போதிய நிலத்தை ஒதுக்குவது, இந்த கோரிக்கைக்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில் அமையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
காத்திருக்கும் புதிய நீதிமன்றங்கள்: மாவட்ட நீதிமன்ற அதிகாரிகள் கூறும்போது, “தற்போது ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு தளங்கள் ஏற்படுத்தப்பட்டுவிட்டன. மேற்கொண்டு அவற்றில் கூடுதல் தளங்கள் அமைக்க இயலாது. புதிய கட்டிடங்கள் கட்ட காலியிடமும் இல்லை. இங்கு இடம் இல்லாத காரணத்தில்தான் அண்மையில் தொடங்கப்பட்ட வணிக வழக்குகளுக்கான 2 நீதிமன்றங்கள் காந்திபுரத்தில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றன. தற்போதுள்ள நீதிமன்றங்களுடன் கூடுதலாக 2 புதிய மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான நீதிமன்றங்கள், 4 விரைவு நீதிமன்றங்கள், கூடுதலாக ஒரு தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம், கூடுதல் குடும்ப நல நீதிமன்றங்கள் உள்ளிட்டவற்றை அமைக்க வேண்டியுள்ளது. ஆனால், இடம் இல்லை.
மேலும், கோவை குண்டு வெடிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றமானது மாவட்ட நூலகத்துக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மாவட்ட நூலக அலுவலர் அந்த இடத்தை காலிசெய்து தருமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேலும், தற்போதுள்ள இடத்துக்கு வாடகையும் கோரி வருகிறார். கடும் நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், அனைத்து நீதிமன்றங்களும் ஒரே வளாகத்தில் செயல்படும் வகையில் புதிய வளாகத்தை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாக உள்ளது. எனவே, கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் இதற்காக குறைந்தபட்சம் 30 ஏக்கர் நிலத்தை ஒதுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்’’ என்றனர்.
