

சென்னை: நாடாளுமன்றத்தில் புகை குப்பி வீச்சு சம்பவம் பிரதமர் மோடி ஆட்சி மீது படிந்த அழிக்க முடியாத கறை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: புதிய நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பை மீறி புகை குப்பி வீச்சில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்குப் பின்னால் மிகப்பெரிய சதி நடந்திருக்கிறது. கடந்த சில மாதங்களாக முகநூலில் இவர்கள் கருத்து பரிமாற்றம் செய்துள்ளனர். எதிர்க்கட்சியினரின் கருத்து சுதந்திரத்தை பறிப்பதில் அக்கறை காட்டும் பாஜக, சட்டவிரோதமாகச் செயல்பட்ட இத்தகைய குழுக்கள் மீது கண்காணிப்பு இல்லாமல் போனது அலட்சியப் போக்காகும்.
கடந்த காலங்களில் நாடாளுமன்றம் தாக்குதலுக்கு உள்ளாகி 9 பேர் பலியான துயரச் சம்பவம் நடந்த அதேநாளில் மீண்டும் இத்தகைய கொடிய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இது மோடி ஆட்சியின் மீது படிந்த அழிக்க முடியாத கறையாகும்.
சம்பவம் நடந்த அன்றும், மறுநாளும் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் அவைக்கு வராமல் அலட்சியப்போக்குடன் நடந்து கொண்டுள்ளனர். ஆனால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்த சம்பவத்தின்போது அவையில் இருந்திருக்கிறார். இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் அவரைப் போன்ற மக்களவை உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய மத்திய அரசு, அதில் முற்றிலும் தோல்வியடைந்து விட்டதையே இந்த சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.
இச்சம்பவம் குறித்து பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாடாளுமன்றத்தில் விளக்கம் தெரிவிக்க வேண்டுமென்று கோரி குரல் எழுப்பிய மக்களவை உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், கனிமொழி, சுப்பராயன், ஜோதிமணி உள்ளிட்ட 14 பேர், எஞ்சியிருக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுத்த மக்களவைத் தலைவர், புகை குப்பி வீச்சில் ஈடுபட்டவருக்கு அனுமதிச் சீட்டு வழங்கிய மைசூரூ பாஜக எம்.பி. பிரதாப் சின்கா மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி, ஜனநாயகத்தில் ஒரு சர்வாதிகாரியைப் போல செயல்படுவதால்தான் நாடாளுமன்றம் இத்தகைய தாக்குதலுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகிறது. இத்தகைய போக்குகள் இந்தியாவின் ஜனநாயகத்துக்கே கேலிக்கூத்தாக அமைந்து விட்டது. இந்த பேராபத்திலிருந்து இந்தியாவை மீட்க ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்.