

மதுரை/திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த அருண்குமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: அம்பை காவல் நிலையத்தில் விசாரணைக்குச் சென்ற எனது பற்களை ஏஎஸ்பி பல்வீர்சிங் உடைத்தார். என்னைப்போல பலரின்பற்களையும் உடைத்துள்ளார்.
அம்பை காவல் நிலையத்தின் கண்காணிப்புக் கேமரா காட்சிகளை எனக்கு வழங்கவும், வன்கொடுமை வழக்கில் உரிய இழப்பீடு வழங்கவும், சம்பவம் குறித்து விசாரணைநடத்திய ஐஏஎஸ் அதிகாரி அமுதாவின் விசாரணை அறிக்கையை வழங்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் உரிய பதில் அளிக்கவில்லை என நீதிபதி அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, வழக்கின் இறுதித் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி இளங்கோவன் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
14 பேருக்கு ஜாமீன்: அம்பாசமுத்திரம் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்களின் பற்களைப் பிடுங்கியது தொடர்பான வழக்கு திருநெல்வேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஏஎஸ்பி பல்வீர்சிங், கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமார் உள்ளிட்ட14 போலீஸார் மீது, திருநெல்வேலி 1-வது நீதித் துறை நடுவர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, பல்வீர்சிங் உள்ளிட்ட போலீஸார்ஆஜராகினர். அப்போது குற்றப்பத்திரிகை நகல்கள் வேண்டும் என்று அவர்கள் தரப்பில் கோரிக்கைவைக்கப்பட்டது இதையடுத்து, 1,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. தொடர்ந்து, இந்த வழக்கில் பல்வீர்சிங் உள்ளிட்ட 14 போலீஸாருக்கும் ஜாமீன் வழங்கிநீதித் துறை நடுவர் திரிவேணி உத்தரவிட்டார்.