Published : 16 Dec 2023 06:17 AM
Last Updated : 16 Dec 2023 06:17 AM
உதகை / திருப்பூர்: கேரளாவிலிருந்து வருவோர் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட பின்னரே நீலகிரி மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர் என மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்தார். கேரள மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினமும் 200-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்திலும் கடந்த 24 மணிநேரத்தில் 37 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்நிலையில், கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட பின்னரே நீலகிரி மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.அருணா கூறும்போது, ‘‘கேரளாவிலிருந்து நீலகிரி மாவட்டத்துக்குள் வருவோரின் உடல் வெப்ப நிலை, சளி மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. 30 பேரின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. பரிசோதனை முடிவில், அவர்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. எனவே, கரோனா குறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை’’ என்றார்.
சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்: பல்லடம் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு தலைவர் ஆ.அண்ணாதுரை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கேரளாவில் அதிக அளவில் கரோனா தொற்று பரவி வருகிறது. கேரளாவில் இருந்து பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் வேலைக்காக தொழிலாளர்கள் பலர் தமிழ்நாட்டுக்கு வந்து செல்கின்றனர். கேரளாவில் இருந்து வரும் நபர்களை பரிசோதனை செய்த பின்னரே தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும். கேரள எல்லைப் பகுதிகளான கோவை, பொள்ளாச்சி, உடுமலை போன்ற பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைத்து, கேரளாவில் இருந்து வருவோரை பரிசோதிக்க வேண்டும். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களில் சுகாதார பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT