Published : 16 Dec 2023 06:20 AM
Last Updated : 16 Dec 2023 06:20 AM
சேலம்/ஈரோடு/நாமக்கல்: சேலம் மாவட்டத்தில் உள்ள சட்டப் பேரவை தொகுதிகளில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சிக்காக வரும் 18-ம் தேதி முதல் செயல் விளக்க மையம் செயல்பட தொடங்குகிறது. மக்களவை தேர்தலை முன்னிட்டு, பொதுமக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படும் முறை குறித்து பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரும் 18-ம் தேதி முதல் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் நாள் வரை, சட்டப்பேரவை தொகுதி வாரியாக, வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல் விளக்க மையம் அமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களை, சேலத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேமிப்பு கிடங்கில் இருந்து, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தேர்வு செய்தார். பின்னர், அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் தனி பாதுகாப்பறையில் வைப்பதற்கு அவை அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்விளக்க மையங்கள், ஆட்சியர் அலுவலகம் மற்றும் 11 சட்டப்பேரவை தொகுதிகள் என மொத்தம் 12 இடங்களில் வரும் 18-ம் தேதி முதல் செயல்பட உள்ளன.
அதன்படி , ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் மேற்கு ஆகிய தொகுதிகளில் வட்டாட்சியர் அலுவலகங்களிலும், சேலம் வடக்கு தொகுதியில் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டல உதவி ஆணையர் அலுவலகம், சேலம் தெற்கு தொகுதியில் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டல உதவி ஆணையர் அலுவலகம், வீரபாண்டி தொகுதியில் சேலம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றில், வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்விளக்க மையங்கள் அமைக்கப்படுகின்றன.
ஈரோடு: ஈரோடு கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை, அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டார். தொடர்ந்து அவர் கூறியதாவது: மாவட்டத்தில் மொத்தம் 2,222 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில், 10 சதவீத எண்ணிக்கையிலான 223 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பணிக்காக, ஈரோடு மற்றும் கோபி கோட்டாட்சியர்களிடம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வழங்கப்பட்டுள்ளன. ஈரோடு, பெருந்துறை, மொடக் குறிச்சி, சத்தியமங்கலம், கோபி உள்ளிட்ட 9 வட்டாட்சியர் அலுவல கங்களில், 18-ம் தேதி முதல் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு மையம் அமைக்கப்படவுள்ளது, என்றார்.
நாமக்கல்: இதேபோல, நாமக்கல் ஆட்சியர் உமா தலைமையில், அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை திறக்கப்பட்டது. விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மொத்தம் 163 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக் கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT