கூவம் கரையில் 11.50 ஏக்கர் வெள்ளப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட சிஎம்டிஏ ஒப்புதல் அளிக்க கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

கூவம் கரையில் 11.50 ஏக்கர் வெள்ளப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட சிஎம்டிஏ ஒப்புதல் அளிக்க கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: கூவம் வெள்ளப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு (சிஎம்டிஏ) பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை பூந்தமல்லி கூவம் ஆற்றிலிருந்து பங்காரு கால்வாய் பிரிந்து செல்லும் இடத்துக்கு அருகே கூவம் ஆற்றின் கரையில் 11.50 ஏக்கர் வெள்ளப்பகுதி அமைந்துள்ளது. இந்த நிலப்பரப்பை நகர்ப்புறம் அல்லாத பயன்பாட்டுக்கான பகுதி என்ற நிலையிலிருந்து, குடியிருப்புகள் கட்டுவதற்கான பகுதி என்றுவகைப்பாடு மாற்றம் செய்வது குறித்து சிஎம்டிஏ ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆணையத்தின் தொழில்நுட்பக் குழு இந்த வகைப்பாடு மாற்றத்துக்குஅனுமதி அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிஎம்டிஏவின் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தான விளையாட்டாகும். கூவம் ஆற்றில்வழக்கத்தை விட கூடுதலாக சில ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டாலே, அதனைஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவது வழக்கம். இத்தகைய சூழலிலும் கூவம் ஆற்றுவெள்ளப்பகுதியில் அமைந்திருக்கும் 11.50ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலத்தின் வருவாய் ஆவணங்கள் தெளிவாக இல்லாத நிலையில்,அந்த நிலத்தை குடியிருப்பு பகுதியாக மாற்ற நிலத்தின் மட்டத்தை 4.325 மீட்டர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீர்வளத்துறையும் ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு செய்யப்பட்டால் அதைத் தவிர்த்துமற்ற பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. அண்மையில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளிலிருந்து அரசும்,சிஎம்டிஏவும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் கூவம் ஆற்றின் வெள்ளப் பகுதியில்அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று சிஎம்டிஏவுக்கு முதல்வர் ஆணையிட வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in