

சென்னை: தீயணைப்புத் துறை பயன்பாட்டுக்காக ரூ.63.30 கோடி மதிப்பிலான அதிஉயர் அழுத்த நீர் தாங்கிவண்டிகள் உள்ளிட்ட வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தீயணைப்புத் துறையின் செயல்திறனை மேம்படுத்த அரசு பல்வேறு நவீன கருவிகள் மற்றும் தீயணைப்பு ஊர்திகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், பலமாடிக் கட்டிடங்களில் ஏற்படும் தீ விபத்துகளைச் சமாளிக்க 54 மீட்டர் உயரம் வரை வான்நோக்கி உயரும் ஏணி கொண்ட 3 ஊர்திகள், மலைப்பாங்கான இடங்களில் ஏற்படும் தீ விபத்துகளைக் கையாள்வதற்கு 4 சக்கர இயக்கம் கொண்ட 7 அதிஉயர் அழுத்த நீர்தாங்கி வண்டிகள், தீ விபத்து நடைபெற்ற இடங்களில் ஏற்படும் தண்ணீர் தேவையை உடனடியாக சமாளிக்க 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 20 வாட்டர் பவுசர் வாகனங்கள், பழுதடைந்த நீர்தாங்கி வண்டிகளுக்கு மாற்றாக 25 புதிய நீர்தாங்கிவண்டிகள், மாவட்ட அலுவலர்களின் பயன்பாட்டுக்காக 16 ஜீப்கள், பேரிடர் நேரங்களில் ஆட்கள் மற்றும் உபகரணங்களை ஏற்றிச் செல்லும் 2 ஊர்திகள் ஆகியவை ரூ.63.30 கோடியில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை தீயணைப்புத் துறை பயன்பாட்டுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, உள் துறை செயலர் பெ.அமுதா, தீயணைப்புத் துறை இயக்குநர் அபாஷ் குமார், இணை இயக்குநர் என்.ப்ரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.