

மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. தரை தளம் மற்றும் 3-வது தளத்தில் 29 பேர் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
மீட்புப் பணிகள் இன்று (திங்கள்கிழமை) 4-வது நாளாக தொடர்ந்த நிலையில், நள்ளிரவு முதல் செவ்வாய்க்கிழமை இரவு வரை 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 3 பேர் இன்று காலை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இதுவரை, கட்டிட இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது என பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்தார். இன்று காலை மீட்கப்பட்ட மூவரில் இருவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சென்னை போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்று காலை மீட்கப்பட்ட மகேஷ் என்பவர் கட்டிட இடிபாடுகளுக்குள் தனது மனைவி உள்ளிட்ட பலர் உயிருடன் சிக்கிக் கொண்டிருப்பதாக கூறியதையடுத்து மீட்பிப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் உயிருடன் மீட்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மீட்கப்பட்டவர்கள் அளித்த தகவலின்படி தரை மற்றும் இரண்டாம் தளம் முழுமையாக சேதமடையவில்லை என தெரிகிறது. அதனால் அங்கு சிக்கிக் கொண்டிருப்பவர்கள் உயிருடன் மீட்கப்பட வாய்ப்பிருக்கிறது என்றார்.
மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பாக முந்தையச் செய்தித் தொகுப்பு:
தரை தளம், 3-வது தளத்தில் சிக்கிய 29 பேரின் கதி என்ன?
சென்னை போரூர் அருகே மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டிடம் சனிக்கிழமை மாலையில் இடிந்து விழுந்தது. இடிந்தபோது கட்டிடத்திற்குள் 72 பேர் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிவிட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை 21 பேரை உயிருடன் மீட்டனர், 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
3–வது நாளாக திங்கள்கிழமை தொடர்ந்து நடந்த மீட்புப் பணியில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் பின்னர் 7 மற்றும் 8-வது தளத்தில் துளையிட்டு அங்கிருப்பவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. 7-வது தளத்தை துளையிட்டபோது 2 பெண்கள் இருப்பது தெரிந்தது. அவர்களில் ஒருவர் ஆந்திர மாநிலம் திருச்சக்குளத்தைச் சேர்ந்த மீனம்மாள் (35). மயங்கிய நிலையில் இருந்த மற்றொரு பெண்ணின் பெயர் தெரியவில்லை. அவர் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
10.30 மணியளவில் 7-வது தளத்தின் கட்டிட இடிபாடுகளின் ஒரு பகுதியில் இருந்து இளைஞர் ஒருவர் எழுப்பிய சத்தம் கேட்டது. சத்தம் வந்த இடத்தை நோக்கி கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்புக் குழுவினர் முன்னேறி சென்றனர். அங்கு வடமாநில இளைஞர் ஒருவர் சிக்கியிருப்பது தெரிந்தது. அவரை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். அவரது பெயர் கோவிந்தராஜ். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவருடன் சேர்த்து திங்கள்கிழமை 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
கட்டிடம் இடிந்து தரை மட்டமானபோது அதில் மொத்தம் 72 பேர் இருந்தனர். 20 பேர் இறந்த நிலையிலும், 23 பேர் காயங்களுடனும் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 29 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. இவர்களில் பெரும்பாலானவர்கள் தரை தளத்திலும், 3-வது தளத்திலும் உள்ளனர். அந்த தளங்கள் மீதுதான் மற்ற தளங்களின் இடிபாடுகள் கிடக்கின்றன. கட்டிடம் இடிந்து விழுந்து இரு நாட்கள் கடந்த நிலையில் அவர்களில் பலர் இறந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதை உறுதி செய்வதுபோல அந்த இடம் முழுவதும் கடும் துர்நாற்றம் வீசத் தொடங்கிவிட்டது. கட்டிட இடிபாடுகளுக்கு இடையே மேலும் சிலர் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது என்று மீட்புக் குழுவினர் நம்புகிறார்கள். இதனால் தொடர்ந்து மீட்புப் பணிகளை செய்து வருகின்றனர்.
வழக்கு விசாரணை
பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் சுப்பிரமணி தலைமையிலான காவல் துறையினர் கட்டிடம் இடிந்தது தொடர்பான வழக்கு விசாரணையை நடத்தி வருகின்றனர். இடிந்துபோன கட்டிடத்தை கட்டிய பிரைம் சிருஷ்டி கட்டுமான நிறுவன உரிமையாளர் மனோகரன், அவரது மகன் முத்துகாமாட்சி, இன்ஜினீயர்கள் சங்கர ராமகிருஷ்ணன், துரைசிங்கம், வெங்கடசுப்பிரமணியம், கட்டிட வடிவமைப்பாளர் விஜய் மல்கோத்ரா ஆகிய 6 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களில் மனோகரன், முத்துகாமாட்சி, வெங்கடசுப்பிரமணியம், சங்கர ராமகிருஷ்ணன் ஆகியோர் மதுரையை சேர்ந்தவர்கள். துரைசிங்கம் தஞ்சை அருகே திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர். விஜய் மல்கோத்ரா சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர். கைதான 6 பேரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கட்டிட உரிமையாளர் மனோகரனுக்கு கட்டுமானத்துறை தொடர்பாக எந்த அனுபவமும் இல்லை. வங்கியில் ஊழியராக வேலை செய்த அவர் விருப்ப ஓய்வு பெற்று எந்தவித அனுபவமும் இல்லாமல் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் விதி மீறலில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.