Published : 16 Dec 2023 06:16 AM
Last Updated : 16 Dec 2023 06:16 AM

விருதுநகர் | வன விலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப் பன்றியை நீக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

வன விலங்குகள் பட்டியலிலிருந்து காட்டுப் பன்றியை நீக்கக் கோரியும், பயிர்க் காப்பீட்டு தொகை வழங்க கோரியும் கழுத்தில் கோரிக்கை அட்டை அணிந்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலனிடம் மனு கொடுக்கும் விவசாயிகள்.

விருதுநகர்: வன விலங்குகள் பட்டியலிலிருந்து காட்டுப் பன்றியை நீக்கக்கோரி, கழுத்தில் கோரிக்கை விளக்க அட்டை அணிந்து விருதுநகரில் நடைபெற்ற குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்றனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், வேளாண்மை இணை இயக்குநர் விஜயா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் செந்தில்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள், வேளாண் சார்ந்த பல்வேறு துறை அலுவலர்கள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம்: ஸ்ரீவில்லிபுத்தூர் விவசாயி அம்மையப்பன்: தென்னைக்கு காப்பீடு செய்ய சிறப்பு முகாம் நடத்த வேண்டும். நெல் பயிரில் பூச்சித் தாக்குதல் அதிகம் உள்ளது. வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து நோய் தாக்குதலிலிருந்து நெற்பயிரை காக்க வேண்டும். தற்போது 65 நாட்கள் பயிராக பால் பிடிக்கும் தருவாயில் உள்ளதால் நோய் தாக்குதல் ஏற்பட்டு பதறாகி உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. காரியாபட்டி மறைக்குளம் பகுதி விவசாயிகளும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும் பூச்சி தாக்கிய நெற் பயிரை அதிகாரிகளிடம் காட்டினர். மாவட்டத்தில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால் பல விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர். வன விலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப் பன்றியை நீக்க வேண்டும். அதோடு,பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகள் பலர் காப்பீட்டுத் தொகைகிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமச்சந்திரராஜா உள்ளிட்டோர் கழுத்தில் கோரிக்கை விளக்க அட்டை அணிந்து, ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். மேலும் மாவட்டத்தில் பருத்தி சாகுபடியை அதிகரிக்க நவீன ரக சாகுபடிக்கு வேளாண் துறை வழிகாட்ட வேண்டும். ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சேத்தூர்பகுதியில் பழக்கூழ் தயாரிக்கும் ஆலை அமைத்தல், விளைச்சல் நன்றாக உள்ளதால் தேவைப்படும் இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. ஆட்சியர் பேசுகையில், போதிய அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். கூடுதலாக கட்டணம் வசூலித்தால் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தால் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x