Published : 16 Dec 2023 06:47 AM
Last Updated : 16 Dec 2023 06:47 AM
திருநெல்வேலி: அமெரிக்காவில் உயிரிழந்த திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் சகாய ஜெபாஸ் பிரஜோப் (18) -ன் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இந்நிலையில் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. ராதாபுரம் வட்டம் மூலைக்காடு பகுதியைச் சேர்ந்த சகாய தாமஸ் ரூபன் மகன் சகாய ஜெபாஸ் பிரஜோப். குவைத்தில் வசித்து வந்தார். அங்குள்ள பள்ளியில் பயின்று வந்த இவர், அமெரிக்காவுக்கு கல்வி பயணமாக 55 மாணவர் களுடன் சென்றிருந்தார். இந்நிலை யில் கடந்த 4-ம் தேதி நீரில் மூழ்கி மூளைச்சாவு அடைந்துவிட்டார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
பின்னர் அவரது உடல் திருவனந்தபுரத்துக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து சொந்த ஊரான மூலைக்காடுக்கு நேற்று கொண்டுவரப்பட்டிருந்தது. அங்குள்ள புனித ராயப்பர் தேவாலயத்தில் இறுதி சடங்கு திருப்பலி நடைபெற்றது. மாணவர் சகாய ஜெபாஸ் பிரஜோபின் உடலுக்கு சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது ஷபீர் ஆலம் , ராதாபுரம் வட்டாட்சியர் பாஸ்கரன், வள்ளியூர் காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பின்னர் அங்குள்ள கல்லறை தோட்டத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT