எண்ணூர் எண்ணெய் கசிவு | இதுவரை 48.6 டன் கழிவுகள் அகற்றம்: தமிழக அரசு

எண்ணூர் எண்ணெய் கசிவு | இதுவரை 48.6 டன் கழிவுகள் அகற்றம்: தமிழக அரசு
Updated on
1 min read

சென்னை: எண்ணூர் துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 276 பீப்பாய்களில் 48.6 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வடசென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக வெளியேறிய பெட்ரோலிய எண்ணெய்க் கழிவு, கொசஸ்தலை ஆற்றில் கலந்து கடலில் பரவியுள்ளது. இதனால் மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் பாழாகி தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் புகுந்த வெள்ளத்தில் கலந்து, வீடுகளுக்குள்ளும் எண்ணெய் கழிவுகள் படிந்து, பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. மேலும், எண்ணெய் கழிவுகளை விரைவாக அகற்ற தமிழக அரசுக்கும், சிபிசிஎல் நிறுவனத்துக்கும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியை தமிழக அரசு முடுக்கிவிட்டது.

இந்த நிலையில், சென்னை எண்ணூர் துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 276 பீப்பாய்களில் 48.6 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் தமிழக அரசுடன் தற்போது மும்பையைச் சேர்ந்த ‘சீ கேர் மரைன் சர்வீசஸ்’ என்ற நிறுவனமும் கைகோர்த்துள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஆறு பேர் வல்லுநர் குழு கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை சுமார் 276 பீப்பாய்களில் 48.6 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. எண்ணூர் குப்பம், நெட்டு குப்பம், தாளான் குப்பம் ஆகிய கிராமங்களில் ஜேசிபி மற்றும் டிப்பர் லாரிகள் மூலம் துப்புரவு பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 482 தொழிலாளர்கள் இதுவரை ஈடுபட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in