மழை ஓய்ந்து ஒரு வாரமாகியும் வடியாத வெள்ளம்: நெல்லையில் குடியிருப்புவாசிகள் அவதி

திருநெல்வேலி டவுனில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் லாலுகாபுரம் அருகே அரசன் நகர் பகுதி குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளம். | படம்: மு.லெட்சுமி அருண்.
திருநெல்வேலி டவுனில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் லாலுகாபுரம் அருகே அரசன் நகர் பகுதி குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளம். | படம்: மு.லெட்சுமி அருண்.
Updated on
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலியில் மழை ஓய்ந்து ஒரு வாரமாகியும் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள வெள்ளம் வடியவில்லை என்பதால் இப்பகுதி மக்கள் அவதியுறுகிறார்கள்.

திருநெல்வேலியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தொடர்ச்சியாக சில நாட்களுக்கு மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. அவ்வாறு தேங்கிய தண்ணீர் அடுத்தடுத்த நாட்களில் வடிந்துவிட்டது. ஆனால், திருநெல்வேலி டவுனில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் லாலுகாபுரம் அருகே அரசன் நகர் பகுதி குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள வெள்ளம் இன்னும் வடியவில்லை.

கடந்த ஒரு வாரமாக மழை பெய்யாத நிலையிலும் இங்கு குளம்போல் தேங்கியிருக்கும் தண்ணீர் வடியாமல் இருப்பதால் குடியிருப்பு வாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், தேங்கிய தண்ணீரை வடியவைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

இப்பகுதியில் தேங்கியிருப்பது நன்னீர் என்பதால் டெங்கு கொசு உற்பத்தியாகும் வாய்ப்பு உள்ளதாக இங்குள்ளவர்கள் அச்சம் தெரிவித்தனர். திருநெல்வேலி மாநகரில் கொசுப் புழு ஒழிப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டிருக்கும் நிலையில், அரசன் நகர் பகுதியில் தேங்கியிருக்கும் தண்ணீரை வடியவைக்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இந்தக் குடியிருப்பு பகுதியில் சாலையையொட்டி மழைநீர் ஓடை இருக்கிறது. தேங்கியிருக்கும் தண்ணீரை அந்த ஓடைக்கு திருப்பி விட மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in