Published : 31 Jan 2018 06:06 PM
Last Updated : 31 Jan 2018 06:06 PM

பெங்களூரு, ஹைதராபாத்தில் 10 இடங்களில் கொள்ளையடித்தேன்: விசாரணையில் நாதுராம் தகவல்

பெங்களூரு, ஹைதராபாத்தில் 10 இடங்களில் கொள்ளையடித்ததாக போலீஸ் விசாரணையில் நாதுராம் தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ம் தேதி சென்னை கொளத்தூர் நியூ லட்சுமிபுரம் கடப்பா சாலையில் நகைக்கடையில் மேல்தள சுவரை பெயர்த்து 3.5 கிலோ தங்க நகைகள் மற்றும் 4 கிலோ வெள்ளி நகைகள், ரூ. 2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து ராஜமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை வழக்கு குறித்து தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் தொடர்புடைய கொள்ளையன் நாதுராமை பிடிக்க ராஜஸ்தான் சென்றபோது மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார். தப்பி ஓடிய நாதுராமை ராஜஸ்தான் போலீஸார் குஜராத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து கடந்த ஜனவரி 25 அன்று சென்னை போலீஸார் அங்கு சென்று நாதுராம், கூட்டாளிகள் தினேஷ் சவுத்ரி, பக்தாராம் ஆகியோரை கைது செய்து சென்னை கொண்டு வந்து சிறையில் அடைத்தனர்.

நேற்று 3 பேரையும் ராஜமங்கலம் போலீஸார் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்தனர். நேற்றிரவு முழுவதும் 3 பேரிடம் தனித்தனியாக போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது போலீஸ் தரப்பில் நாதுராமிடம் பல கேள்விகளை வைத்தனர். கொள்ளை, நகைகளை விற்றது, ராஜஸ்தானில் மோதல் சம்பவத்தில் நடந்தது குறித்து 3 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் கொள்ளை சம்பவத்தை திட்டம் தீட்டி வழி வகைகளை சொல்லிக்கொடுப்பது நாதுராம் என்பது தெரியவந்தது. கொள்ளையடித்த நகைகளை சென்னை, பெங்களூரு பகுதிகளில் அடகு கடையில் விற்றுள்ளனர். எந்தெந்த அடகு கடைகளில் நகைகளை விற்றார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நாத்துராம் கொள்ளையடித்த நகைகளை சென்னை, பெங்களூரில் அடகு கடைகளில் விற்றிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கூட்டாளி பக்தாராம் உதவியோடு சென்னை சவுகார்பேட்டையில் உள்ள அடகு கடை ஒன்றிலும், நாத்துராம் பெங்களூரில் உள்ள அடகு கடை ஒன்றிலும் கொள்ளையடித்த நகைகளை விற்றிருப்பதாக நாத்துராம் வாக்குமூலமாக தெரிவித்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

கொள்ளைச் சம்பவங்களில் மூளையாக செயல்பட்ட நாதுராமை மட்டும் தனியாக வைத்து ராஜமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அண்ணாநகர் துணை ஆணையர் சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீஸாரும் நாதுராமிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் போது 3 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதுராம் கூட்டாளிகளோடு பெங்களுரூ, ஹைதராபாத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை காட்டியிருப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். கொளத்தூரில் கொள்ளையடித்த நகைகளை வாங்கிய சவுகார்பேட்டை அடகு கடைக்காரரை பக்தாராம் அளித்த தகவலின் பேரில் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதைப்போல பெங்களூர் அடகு கடைக்காரர் யார் எங்கு இருக்கிறார் என்பது குறித்தும் நாதுராமிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவைப்பட்டால் பெங்களூருக்கு நாதுராமை அழைத்துச்செல்லவும் போலீஸார் முடிவெடுத்துள்ளனர். மேலும் கொள்ளை நடந்த கொளத்தூர் நகைக்கடைக்கு நாத்துராம் மற்றும் கூட்டாளிகளை அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும் சென்னையில் நாதுராம் நேரடியாக சிக்கியது மூன்று இடங்களில். இதில் மாதாவரம், கொளத்தூர் தவிர இன்னொரு இடத்திலும் கைவரிசை காட்டி சிக்கி ஜாமினில் வெளிவந்து பின்னர் சிக்கவில்லை. அதனால் கொளத்தூர் கொள்ளைக்கு முன்னர் சென்னையில் வேறு எங்காவது நாதுராம் ஈடுபட்டுள்ளாரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பெரிய பாண்டியன் சுடப்பட்டது குறித்து நாதுராம் முன்னுக்கு பின் முரணாக தகவல் கூறுவது போலீஸாரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே போலீஸார் மேலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x