

சென்னை: வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக பதியப்பட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள கூடுதல் குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிரான குற்றவியல் வழக்கு விசாரணைக்கு அரசிடமிருந்து இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை என சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2011-15 அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் போலீஸில் புகார் அளித்தனர்.
அதன்பேரில், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பல வழக்குகளை போலீஸார் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இந்த வழக்குகளில் இருந்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், செப்.30-க்குள் வழக்கை விசாரித்து கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த செப்டம்பரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கூடுதல் குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான குற்றவியல் வழக்கு விசாரணைக்கு அரசிடமிருந்து இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து இந்த வழக்கை ஜன.3-க்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.