கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா: தமிழகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை

கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா: தமிழகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை
Updated on
1 min read

சென்னை: தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் நேற்று கூறியதாவது: தமிழக பொது சுகாதாரத் துறை மேற்கொண்ட ஆய்வுகளில் நமது மாநிலத்தில் 87 சதவீதம் பேருக்கு கரோனாவுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் உருவாகியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

தற்போது கேரளத்தில் பாதிப்பு அதிகரித்து வருவதை கவனித்து வருகிறோம். அந்த தொற்று, ஏற்கெனவே தமிழகத்தில் பரவிய கரோனா தொற்றுதானா அல்லது புதிய வகை உருமாற்றமா என்பது தெரியவில்லை. ஆனாலும், தமிழகம் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்ஃப்ளூயன்ஸா தொற்று பாதிப்புடன் மருத்துவமனைகளுக்கு செல்பவர்களுக்கு மூச்சு திணறல், சளி, காய்ச்சல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் இருந்தால், அவர்களில் தேவையானவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் செய்யப்படும்.

தேவைப்பட்டால் தினமும் செய்யப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஏற்கெனவே, தீவிர கரோனா தொற்று பரவலை எதிர்கொண்டு கட்டுக்குள் கொண்டு வந்த அனுபவம் தமிழகத்துக்கு இருக்கிறது. அதனால், கேரளாவின் கரோனா தொற்று பரவலை கண்டு பொதுமக்கள் அச்சமோ, பயமோ கொள்ள தேவையில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in