

மதுரை/திண்டுக்கல்: அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அன்கித் திவாரி, திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் அன்கித் திவாரி தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. மேலும், அன்கித் திவாரியை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு, திண்டுக்கல் தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து அன்கித் திவாரியை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
விசாரணைக்குப் பின் திண்டுக்கல் நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்ட அன்கித் திவாரிக்கு வரும் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி மோகனா உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மதுரை கொண்டு செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே அன்கித் திவாரி சிறையில் தனக்கு முதல் வகுப்புக் கேட்ட மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில், அன்கித் திவாரிஉயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.அதில், "என் மீதான குற்றச்சாட்டு பொய்யானது. புகார் அளித்த மருத்துவருக்கு எதிராக அமலாக்கத் துறையில் எந்த வழக்கும் இல்லை. அவ்வாறு இருக்கும்போது, எந்த வழக்கை சொல்லி அவரிடம் லஞ்சம் கேட்க முடியும்.
நான் கைது செய்யப்பட்டதும், என் வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர். இந்தசோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. எனது செல்போன், லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, என் கைது விதிமுறைக்கு எதிரானது. எனவே,எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, "மனுதாரரை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அரசின் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக உள்ளார். அவர் ஆஜராக வசதியாக, விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்" என்று தெரிவித்தார். இதையடுத்து, அடுத்த விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.