மின் கட்டணம் செலுத்த டிச.4 முதல் 17 வரை கடைசி நாளாக இருந்தால் டிச.18-க்குள் அபராதமின்றி செலுத்தலாம்: மின்வாரியம் அவகாசம்

மின் கட்டணம் செலுத்த டிச.4 முதல் 17 வரை கடைசி நாளாக இருந்தால் டிச.18-க்குள் அபராதமின்றி செலுத்தலாம்: மின்வாரியம் அவகாசம்
Updated on
1 min read

சென்னை: கனமழையால் பாதிப்புக்குள்ளான சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த டிச.4 முதல் 17-ம் தேதி வரை கடைசி நாளாக இருக்கும் நுகர்வோர் டிச.18-க்குள் அபராதமின்றி கட்டணம் செலுத்தலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வீடுகளுக்கான மின் இணைப்பைப் பொறுத்தவரை கட்டணம் கணக்கீடு செய்யப்பட்ட 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும். அண்மையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக நீர் தேங்கியதால் கணக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், மக்களின் உடைமைகள் பாதிப்புக்குள்ளானதோடு, மின்விநியோகம் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் இணையவழியிலும் கட்டணம் செலுத்த முடியாத சூழல் இருந்தது.

இதனால் மின் நுகர்வோருக்கு கட்டணம் செலுத்துவதற்கு வாரியம் அவகாசம் வழங்கியது. தற்போது மேலும் அதிகளவிலான நுகர்வோருக்கு மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கி மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் வருவாய்ப் பிரிவு தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் நீர் தேங்கியது. இதனால் டிச.4 முதல் 7-ம் தேதி வரை மின் கணக்கீடு செய்ய முடியாத நிலை இருந்தது. அவ்வாறு கணக்கீடு மேற்கொள்ளப்படாத நுகர்வோரின் முந்தைய (அக்டோபர்) மாத மின் கட்டணமே டிசம்பர் மாதத்துக்கும் பொருந்தும்.

அதன்படி, மின் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். இதேபோல் டிச.4முதல் 7-ம் தேதி வரை மின் கட்டணம்செலுத்த கடைசி நாளாக இருக்கும் நுகர்வோருக்கு டிச.18-ம் தேதி வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்துவதற்கு அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த நுகர்வோரில் டிச.4 முதல் 17-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாள் இருக்கும் நுகர்வோர் டிச.18-ம் தேதி வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம். அதேநேரம், மின் கட்டணம் செலுத்த தாமதமான காரணத்தால் டிச.4 முதல் நேற்று முன்தினம் (டிச.13) வரை அபராதம் வசூலிக்கப்பட்டிருந்தால், அந்த தொகை அடுத்த மாத மின் கட்டணத்தில் சரிகட்டல் செய்யப்படும். இந்த அவகாசம் தாழ்வழுத்த பிரிவு (வீடுகளுக்கு) இணைப்பு கொண்ட நுகர்வோருக்கு மட்டுமே பொருந்தும். இவ்வாறு மின்வாரியம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in