Published : 15 Dec 2023 06:15 AM
Last Updated : 15 Dec 2023 06:15 AM
சென்னை: மேல்மருவத்தூர் பேருந்து நிலையம் அருகே ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேல்மருவத்தூர் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளகீழ்மருவத்தூர் ஏரியை ஆக்கிரமித்து கடைகள், வாகன நிறுத்துமிடங்கள் போன்ற கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவற்றை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும் கோரி சோத்துப்பாக்கத்தை சேர்ந்த ராஜா என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி சம்பந்தப்பட்ட அரசுஅதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும்நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் கூறும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டதாக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், ஆக்கிரமிப்புகள் இன்னும் அகற்றப்படவில்லை என்றும், இதுதொடர்பாக வழக்கறிஞர் ஆணையரை நியமித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. அதையடுத்து, ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, வழக்கறிஞர் கே.ஏ.பிரபாகரனை, வழக்கறிஞர் ஆணையராக நியமித்து உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜன.11-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT