Published : 15 Dec 2023 06:07 AM
Last Updated : 15 Dec 2023 06:07 AM

சிறுவானூர் கண்டிகையில் தொடக்கப் பள்ளி மேற்கூரை மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் 3 மாணவிகள் படுகாயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுவானூர் கண்டிகையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 35 மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் உள்ள பழைய கட்டிட பகுதியில் நேற்று மதியம் 30 மாணவ - மாணவியர் அமர்ந்து சத்துணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது, பழைய கட்டிடம் அருகே இருந்த அரச மரக்கிளை முறிந்து, கட்டிடத்தின் மேற்கூரை மீது விழுந்தது. இதில் சிதறிய ஓடுகள் சத்துணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவ-மாணவியர் மீது விழுந்தது. இதில், படுகாயமடைந்த, லேசான காயமடைந்த 20 மாணவ-மாணவிகள், சத்துணவு ஊழியர் என 21 பேர், 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, படுகாயமடைந்த தன்சிகா (7), ஹேமா (6), நிஷா (7) ஆகிய 3 மாணவிகள் உள்ளிட்ட 21 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, தகவலறிந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், சந்திரன் ஆகியோர், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ - மாணவிகளை சந்தித்து, ஆறுதல் கூறினர். அப்போது, மருத்துவமனைக்கு வந்த தங்களை மாணவ - மாணவிகளை சந்திக்க திமுகவினர் அனுமதிக்கவில்லை என கூறி, பாஜகவினர் திமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பாஜகவினர் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைத்தனர். மேலும், விபத்து ஏற்பட்ட பள்ளி வளாகத்தில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சிக்கு வந்ததும், தமிழகம் முழுவதும் உள்ள 10,000 சிதிலமடைந்த பள்ளிக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, புதிய கட்டிடங்கள் கட்டி கொடுக்கப்படும் என்று அறிவித்து 3 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களில் பள்ளிகள் தொடர்ந்து செயல்படுவதை எப்படி அனுமதிக்க முடியும்? இந்த 10,000 பள்ளிக் கட்டிடங்கள் எவை எவை, இவற்றில் எத்தனை பள்ளிகளுக்குப் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன, சிதிலமடைந்த பள்ளிக் கட்டிடங்களுக்குப் பதிலாக, மாற்று இடங்களில் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனவா என்பதை பொதுமக்களுக்குத் தெரிவிக்க திமுக அரசு கடமைப்பட்டுள்ளது.உடனடியாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், பள்ளிகளுக்கான கட்டிடங்கள் கட்டி முடிக்க, குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயித்து செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x