Published : 15 Dec 2023 06:06 AM
Last Updated : 15 Dec 2023 06:06 AM
காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிக்கான தனி மாவட்ட அலுவலராக மா.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் போராட்டத்தை தீவிரப்படுத்த போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூரில் சுமார் 500 ஏக்கரில் சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக நிலங்களை கையகப்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூரைச் சுற்றியுள்ள 13 கிராம மக்கள் 500 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த விமான நிலையத்துக்காக ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் நில எடுப்புக்கு தனி மாவட்ட அலுவலரை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் நில எடுப்புக்கான தனி மாவட்ட அலுவலராக இருக்கும் மா.நாராயணன் பரந்தூர் விமான நிலையத்தின் நில எடுப்புக்கான தனி மாவட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் நிலம் எடுப்புக்கான தனி மாவட்ட அலுவலராகவும் அவர் கூடுதல் பொறுப்பை கவனிக்க உள்ளார். இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.எல்.இளங்கோ கூறும்போது, “பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். என்ன விதமான போராட்டம் என்பதை மக்களிடம் கலந்து பேசி முடிவு செய்வோம். ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மனிதாபிமானம் உள்ளவர்களாகவும், மக்களுக்காக செயல்படுபவர்களாகவும் இருக்க வேண்டும். நீர்நிலைகளை அழித்து விமான நிலையத்தை கொண்டு வருகின்றனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT