Published : 15 Dec 2023 06:30 AM
Last Updated : 15 Dec 2023 06:30 AM
சென்னை: நீதித்துறை உள்பட அனைத்து அதிகாரங்களையும் மத்தியில் குவிக்கும்வேலையை பாஜக அரசு செய்துவருவதாக மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார். கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பி.ராமமூர்த்தி நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி, சென்னை தேனாம்பேட்டையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், எழுத்தாளர் கி.ரமேஷ் எழுதிய பி.ராமமூர்த்தியின் வரலாற்று சுருக்கம் அடங்கிய புத்தகத்தை மார்க்சிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வெளியிட பி.ராமமூர்த்தியின் மகள்கள் வைகை, பொன்னி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து, கார்ப்பரேட் - மதவாத கூட்டணி, இந்திய அரசியலமைப்பு சட்ட ஜனநாயகம் சீர்குலைப்பு என்ற தலைப்பில் சீதாராம் யெச்சூரி பேசியதாவது: இந்தியாவை அதன் தன்மையை பாதுகாக்க வேண்டிய சூழல் தற்போது நிலவி வருகிறது. அண்மையில் ஜம்மு காஷ்மீர் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, வரும் காலங்களில் தமிழகம்கூட பிரிக்கப்படலாம். இவ்வாறு நீதித்துறை உட்பட அனைத்தின் அதிகாரத்தையும் மத்தியில் குவிக்கும் வேலையை பாஜக அரசு செய்து வருகிறது.
இத்தகைய போக்குக்கு எதிராகதொடக்க காலத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டவர்தான் பி.ராமமூர்த்தி. அவர் விட்டுச் சென்ற பணியைத் தொடர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். தமிழகம் பல்வேறு விஷயங்களில் முன்னுதாரணமாக இருக்கிறது. குறிப்பாக ஒரு பாஜக எம்.பி.யைகூட வெற்றி பெறச் செய்யவில்லை என்ற பாரம்பரியம் தமிழகத்துக்கு இருக்கிறது. வரும் மக்களவைத் தேர்தலிலும் அது தொடர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசும்போது, "நாடாளுமன்றம், சட்டப்பேரவை போன்றவற்றில் பி.ராமமூர்த்தியின் உரைகளை புத்தமாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அவற்றில் எப்படி மார்க்சிஸ்ட் குரல் கொடுத்தது என்பதற்கான ஆவணமாக அதுஇருக்கும். அதேநேரம், ஆண்டுதோறும் பி.ராமமூர்த்தி நினைவு சொற்பொழிவு நடைபெறும்" என்றார். நிகழ்ச்சியில், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஆறுமுக நயினார் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT