பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊருக்குச் செல்ல சிறப்பு பஸ்கள் போதிய அளவில் ஓடவில்லை: ஏமாற்றத்தில் மக்கள்; ஆன்லைன் முன்பதிவினருக்கு மட்டும் அவசர ஏற்பாடு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊருக்குச் செல்ல சிறப்பு பஸ்கள் போதிய அளவில் ஓடவில்லை: ஏமாற்றத்தில் மக்கள்; ஆன்லைன் முன்பதிவினருக்கு மட்டும் அவசர ஏற்பாடு
Updated on
2 min read

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்ல அறிவிக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் நேற்று இயக்கப்படவில்லை. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே விரைவு பஸ்கள் இயக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பொங்கல் பண்டிகை தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ளன. மக்கள் பொங்கல் பண்டிகையை, சொந்த ஊரில் கொண்டாட தயாராகி வருகின்றனர். ரயில்களில் டிக்கெட் கிடைக்காத பல ஆயிரக்கணக்கான மக்கள் அரசு பஸ்களையே நம்பியுள்ளனர்.

300 கிமீ தூரத்துக்கு மேல் செல்லும் விரைவு பஸ்களில் பயணம் செய்ய ஜனவரி 11, 12, 13-ம் தேதிகளில் www.tnstc.in என்ற இணையதளம் மூலம் இதுவரையில் 75,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். வழக்கமாக இயக்கப்படும் அரசு பஸ்களைத் தவிர, சிறப்பு பஸ்களும் அறிவிக்கப்பட்டன.

குறிப்பாக, சென்னையில் இருந்து ஜனவரி 11, 12, 13-ம் தேதி 5,158 சிறப்பு பஸ்கள் உட்பட மொத்தம் 11,983 பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

மேலும், சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு கடந்த 9-ம் தேதியில் தொடங்கும் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால், அறிவித்தபடி முன்பதிவு தொடங்கவில்லை.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,275 அரசு பஸ்களுடன் சேர்த்து 796 சிறப்பு பஸ்கள் ஜன. 11-ம் தேதி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பஸ் தொழிலாளர்களின் போராட்டம் நேற்றும் நீடித்ததால் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களும், அறிவிக்கப்பட்ட சிறப்பு பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால், பொங்கல் பண்டிகைக்கு முன்கூட்டியே செல்ல நேற்று திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

இது தொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்ல மக்கள் தயாராகவுள்ள நிலையில், போதிய அளவில் அரசு பஸ்கள் இயக்காதது கஷ்டமாக இருக்கிறது. முன்கூட்டியே ஊருக்குச் செல்ல திட்டமிட்டிருந்தவர்களும் தற்போது, கடைசி நேரத்தில் செல்ல வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஜனவரி 11-ம் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இப்போது வழக்கமாக இயக்கப்படும் அரசு பஸ்களே ஓடவில்லை என்றனர்.

இதுதொடர்பாக மற்றொரு தரப்பினர் கூறும்போது, ‘‘ஓரளவுக்கு வசதியுள்ளவர்கள் சொந்த வாகனங்களிலும், ஆம்னி பஸ்களிலும், இதர வாடகை வாகனங்களிலும் பயணம் செய்ய முடியும். ஆனால், தினக்கூலி போன்ற அன்றாட கூலித் தொழிலாளர்கள் அரசு பஸ்களில் மட்டுமே பயணம் செய்ய முடியும். எனவே, போதிய அளவில் அரசு பஸ்களை இயக்காவிட்டால், முதலில் பாதிக்கப்படுவது எங்களை போன்ற ஏழைகள்தான்’’ என்றனர்.

இதுதொடர்பாக போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் செல்ல ஆன்லைன் மூலம் 75,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு போதிய அளவில் ஓட்டுநர்களை ஏற்பாடு செய்து, பஸ்களை இயக்கி வருகிறோம். ஆனால், அறிவிக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் விரைவில் இயக்கப்படும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in