

மேட்டூர்: மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள், நீண்ட நேரமாகியும் மருத்துவர் வராததால் அவதியடைந்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு தினமும் 500-க்கும் மேற்பட்டோர் உள் மற்றும் புற நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். புறநோயாளிகள் பிரிவு காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும். நேற்று, 30-க்கும் மேற்பட்டோர் பொது மருத்துவம் புற நோயாளிகள் பிரிவில் காத்திருந்தனர்.
காலை பணிக்கு வந்த மருத்துவர், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து விட்டு சென்றார். தொடர்ந்து, 9.30 மணி முதல் 11 மணி வரை புற நோயாளிகள் காத்திருந்தும் மருத்துவர் மீண்டும் வரவில்லை. நீண்ட நேரமாகியும் மருத்துவர் வராததால் நோயாளிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். சிலர் தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டனர்.
இது குறித்து புறநோயாளிகள் கூறியதாவது: மருத்துவமனைக்கு வரும் புற நோயாளிகளுக்கு பதிவு சீட்டு வழங்கி விடுகின்றனர். ஆனால், சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் இல்லாததால் காத்திருக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. சிகிச்சை நேரத்தில் மருத்துவர்கள் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினாலும், யாரும் கடைப்பிடிப்பதில்லை, என்றனர்.
இது குறித்து மேட்டூர் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் இளவரசி கூறியதாவது: பொது நல மருத்துவ பிரிவில் 2 மருத்துவர்களில் ஒருவர் தான் 24 மணி நேர பணியில் உள்ளார். அவருக்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்ப வேண்டும் என கூறினோம். ஆனால், புற நோயாளிகள் பிரிவில் உள்ள ஊழியர்கள் தகவலை சரியாக தெரிவிக்காமல் விட்டு விட்டனர், என்றார்.