

சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை வெள்ள பாதிப்பால் குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை இழந்தவர்கள் அவற்றை மீண்டும் பெறுவதற்கான சிறப்புமுகாம், தேனாம்பேட்டை மண்டலம் 119-வது வார்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அந்த முகாமை மாநகராட்சிஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, தண்டையார்பேட்டை மண்டலம், கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ராயபுரம் மண்டலம்,50-வது வார்டு, வெங்கடேசன் தெருவில் தீவிர தூய்மைப் பணியின் கீழ் மழைநீர் வடிந்தஇடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் குப்பையை அகற்றுதல், பொது குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல் போன்றபணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வெள்ளப் பாதிப்பு முடிந்தபிறகு பொது சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொத்தம் 57 ஆயிரத்து 192 டன் குப்பைஅகற்றப்பட்டுள்ளது. உட்புறச் சாலைகளில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீர்செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளுக்கு தனிக் கவனம் செலுத்தி, அவற்றின் மீது நடவடிக்கைகள் தீவிரமாகமேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.