Published : 14 Dec 2023 06:13 AM
Last Updated : 14 Dec 2023 06:13 AM

நாகூர் தர்கா சந்தனக்கூடு விழாவுக்கு அரசு சார்பில் 45 கிலோ சந்தனக்கட்டை: அரசாணையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவுக்கு, 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை, அறங்காவலர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி திருவிழாவுக்கு, தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு வனத்துறையில் இருப்பில் உள்ள சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவுக்கு கட்டணமின்றி வழங்கி வருகிறது.

அந்த வகையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவுக்கு தமிழக அரசு சார்பில் 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலர் அல்ஹாஜ் செய்யது காமில் சாஹிப், தலைமை நிர்வாக அறங்காவலர் செய்யது முகமது காஜி ஹுசைன் சாஹிப் மற்றும் நாகூர் தர்கா ஆலோசனைக் குழு தலைவர் செய்யது முஹம்மது கலீபா சாஹிப் ஆகியோரிடம் நேற்று வழங்கினார்.

இந்நிகழ்வில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் ந.கௌதமன் ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x