

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் நேற்று 2-வது நாளாக ஆய்வு செய்தனர். வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் கடந்த டிச.3 மற்றும் 4-ம் தேதிகளில் பெய்த அதிகனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, வெள்ள பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5060 கோடியை வழங்க வேண்டும் என்றும், மத்திய குழுவை அனுப்பி ஆய்வு செய்யவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.
இதைத்தொடர்ந்து, மழை, வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில், ஊரக வளர்ச்சி அமைச்சகத்தில் இருந்து திமான் சிங், மத்திய வேளாண் துறை இணை இயக்குநர் ஏ.கே.சிவ்ஹரே, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் எஸ்.விஜயகுமார், மத்திய எரிசக்தித் துறை துணை இயக்குநர் பவ்யா பாண்டே, மத்திய நிதி செலவினத்துறை சார்பில் ரங்நாத் ஆடம் ஆகியோர் அடங்கிய குழு டிச.11-ம் தேதி சென்னை வந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனாவை சந்தித்து ஆலோசனை நடத்திய பின், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை இரண்டு குழுவாக பிரிந்து ஆய்வு செய்தது.
தொடர்ந்து, இரண்டாவது நாளாகநேற்று, குணால் சத்யார்த்தி தலைமையில், ரங்கநாத் ஆடம், திமான் சிங்ஆகியோர் கொண்ட மத்தியக் குழுவினர் காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம், மகாலட்சுமி நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து அமரம்பேடு பகுதியில்மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டநெற்பயிர்களை ஆய்வு செய்தனர்.தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலைகள், பிள்ளைப்பாக்கம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளையும் ஆய்வு செய்தனர்.
தாம்பரத்தில் ஆய்வு: இதேபோல் மேற்கு தாம்பரம் சி.டி.ஓ.காலனி, அடையாறு ஆற்றுபகுதிகளில் ஆய்வு செய்தனர். மழையால் பாதித்த வீடுகள், பொருட்களை நேரடியாக பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து மழை பாதிப்பு, மீட்பு பணிகள், நிவாரண உதவிகள் குறித்த புகைப்படக் காட்சியை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். பின்னர் அடையாறு ஆற்றில் கரையோர மக்களிடம் வெள்ளப்பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர். அதன்பின் குன்றத்தூர், செம்பரம்பாக்கம் பகுதிகளிலும் ஆய்வு செய்தனர்.
மக்களிடம் விசாரித்து அறிந்தனர்: தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட நசரத்பேட்டை- யமுனா நகர், மாங்காடு- சக்தி நகர், பூந்தமல்லி- அம்மா நகர் பகுதிகளிலும் ஆய்வு செய்து, மக்களிடம் தகவல்களை கேட்டறிந்தனர். ஆய்வின்போது, சுகாதாரத் துறை செயலர் ககன்தீப்சி்ங் பேடி உள்ளிட்டோர் இருந்தனர். அதேபோல், மத்திய நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் எஸ்.விஜயகுமார், பவ்யா பாண்டே ஆகியோர் அடங்கிய குழு, சென்னை கீ்ழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், வில்லிவாக்கம் அம்பேத்கர் நகர் ஐசிஎப் லிங்க் சாலை, அம்பத்தூர் தொழிற்பேட்டை- பாடி துணை மின் நிலையம், கொரட்டூர் கழிவுநீர் உந்து நிலையம், வடக்கு பிரதான சாலை, ஆவின், செங்குன்றம் ஏரி, சோழவரம் ஏரி, ஆவடி பருத்திப்பட்டில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், பொன்னேரி, திருவொற்றியூர்- பொன்னேரி பஞ்செட்டி சாலை, சுப்பாரெட்டி பாளையம், அத்திப்பட்டு புதூர் நகர், தட்டமஞ்சி, தச்சூர், கொசஸ்தலையாறு, சோமஞ்சேரி பிரளயம்பாக்கம், ஆரணியாறு, பழவேற்காடு, புலிகட் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.