Published : 03 Jan 2018 09:57 AM
Last Updated : 03 Jan 2018 09:57 AM

எம்ஜிஆர் சிறந்த தலைவருக்கான குணங்களை கொண்டிருந்தார்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம்

மறைந்த முதல்வர் எம்ஜிஆர் சிறந்த தலைவருக்கான குணங்களை கொண்டிருந்தார் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம் சூட்டினார்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், அதை நிறுவியவரான மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் மார்பளவு வெண்கலச் சிலையை நேற்றுத் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திறந்து வைத்தார். பின்னர் பேரவை அரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் எழுதிய, ‘எம்ஜிஆர் - பன்முகப் பார்வை’ என்ற தொகுப்பு நூலை அவர் வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது: மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் ஆளுமையும், சமுதாய பங்களிப்பும் பல சந்ததிகளை ஊக்குவிக்கும்.

எம்ஜிஆரின் பள்ளிக் குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டம் ஏழைச் சிறார்களுக்கு உணவளித்து, கல்வி இடைநிற்றலைக் குறைத்ததுடன், கல்வியில் ஜாதி, மத வேற்றுமைகளையும் களைய உதவியது. சமுதாயத்தின் அடித்தட்டில் இருந்தோருக்கு வேலைவாய்ப்பையும் அளித்தது.

எம்ஜிஆரின் கொடையுள்ளம், தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு அவர் செய்த பேருதவிகளின் மூலம் நன்கு வெளிப்படுகிறது. தனது ஆட்சிக் காலத்தில் மத்திய அரசுடன் இணக்கமான உறவை மேற்கொண்டு தமிழகத்துக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும், விவசாயிகளுக்கும், ஏழை எளியோருக்கும் அவர் ஆற்றிய பணிகள் எண்ணிலடங்காதவை. அவர், ஆகச்சிறந்த தலைவருக்கான அருங்குணங்களை கொண்டிருந்தார் என்றார்.

மக்கள் ஆளுநர்

விழாவில் பேசிய தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாடுத் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், ‘தமிழக ஆளுநர் தமிழ் மொழியின் மீது பற்றுக்கொண்டு, தமிழைக் கற்று வருகிறார். தமிழக மக்களின் நலன்கள் மீது அக்கறை கொண்டவர் என்பதால் அவரை மக்கள் ஆளுநர் என்றே குறிப்பிடலாம்’ என்றார்.

ஆளுநர் ஆய்வு

முன்னதாக, தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் வழிபாடு செய்த ஆளுநர், குழந்தையம்மாள் நகரில் வீடு வீடாகச் சென்று, பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து வாங்குகிறார்களா? என்பதைக் கேட்டறிந்தார். பின்னர், புதிய பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

தொடர்ந்து, தான் தங்கியிருந்த பொதுப்பணித்துறை மாளிகையில், தஞ்சாவூர் மாவட்டத் திட்டப் பணிகள் குறித்து ஆளுநர் ஆய்வு மேற்கொண்டார். இதில், ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர்.ராஜகோபால், ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.செந்தில்குமார், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் மந்திராசலம், மாநகராட்சி ஆணையர் மு.வரதராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள புகழ் பெற்ற சரஸ்வதி மகால் நூலகத்துக்கத்தை ஆளுநர் பார்வையிட்டார்.

பின்னர், பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகையில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொது நல அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தார்.

கறுப்புக் கொடி

திட்டப் பணிகளை ஆளுநர் ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை பேருந்து நிலையம் எதிரே முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் உள்ளிட்ட திமுகவினரும், ரயிலடியில் பெ.மணியரன் தலைமையில் காவிரி உரிமை மீட்புக் குழுவினரும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x