Published : 14 Dec 2023 04:06 AM
Last Updated : 14 Dec 2023 04:06 AM
மதுரை: ரயில்வே துறையில் சிறப்பாக பணியாற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய அளவில் அடி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார் என்ற விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு இந்திய அளவில் 100 ஊழியர்கள், அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தெற்கு ரயில்வே பிரிவில் 6 ஊழியர்கள், 3 அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் மதுரை கோட்டம் மானாமதுரை ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணியாளர் கே.வீரப்பெருமாள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். அவர் ரயில் பாதையில் விரிசல் இருப்பதை கண்டறிந்து துரிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சென்னையில் பணியாற்றும் மதுரை கோட்ட பயணச் சீட்டு பரிசோதகர் டி.செல்வகுமார் போலி ஆதார் அட்டைகளை பயன்படுத்தி ரயில் பயணச்சீட்டில் பெயர் மாற்றம் செய்வது மற்றும் முதியோர் இட ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்துவது போன்றவற்றை கண்டறிந்து அபராதம் விதித்தார். இதற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது.
ரயில் பாதையில் நின்ற யானையை காப்பாற்ற விரைந்து ஓடும் ரயிலை நிறுத்திய ரயில் ஓட்டுநர் ஈரோடு எம். கே. சுதீஷ்குமார், சட்ட விரோத நடவடிக்கையை தடுத்து நிறுத்திய சென்னை ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் மதுசூதன் ரெட்டி, எலக்ட்ரிக் ரயில் இன்ஜின் முகப்பை பழைய கால நீராவி என்ஜின் போல மாற்றிய ஆவடி பகுதி பொறியாளர் ஏ. செல்வராஜா,
இதய நோயாளிகளுக்கு சிறப்பாக சேவை செய்த பெரம்பூர் ரயில்வே மருத்துவ செவிலிய கண்காணிப்பாளர் துர்கா தேவி, முதல் பாரத் கவுரவ் ரயில் இயக்க உறுதுணையாக இருந்த சேலம் கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் இ.ஹரி கிருஷ்ணன், சென்னை பகுதியில் ரயில்களை அதிவேகத்தில் இயக்க ரயில் பாதையை பலப்படுத்த உறுதுணையாக இருந்த சென்னை கோட்ட முது நிலை பொறியாளர் எஸ்.மயிலேறி,
சிக்னல் குறைபாடுகளை தவிர்க்க உறுதுணையாக இருந்த உதவி தொலைத் தொடர்பு பொறியாளர் எஸ்.மாரியப்பன் ஆகியோருக்கும் தேசிய விருது வழங்கப்படுகிறது. டெல்லியில் நாளை ( டிச. 15 ) நடக்கும் விழாவில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விருதுகளை வழங்குவதாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT