Published : 02 Jan 2018 12:02 PM
Last Updated : 02 Jan 2018 12:02 PM

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மூடு விழாவா?- மருத்துவர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்: திருநாவுக்கரசர் எச்சரிக்கை

இந்திய மருத்துவ கவுன்சில் ஒழிக்கப்பட்டு, மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பேர் கொண்ட தேசிய மருத்துவ ஆணையக் குழு அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து போராட்டம் நடத்துவோம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து திருநாவுக்கரசர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதற்கொண்டு மக்கள் நலனுக்கு விரோதமாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அரசமைப்புச் சட்டத்தில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கம் தனித்தனியே அதிகாரப் பகிர்வுகள் உள்ளன. அதேபோல, பொதுப் பட்டியலில் உள்ள அதிகாரங்களை மாநில நலனுக்கு விரோதமாக கைப்பற்றுவதற்கு மத்திய பாஜக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த முயற்சியின் தொடர்ச்சியாக தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இது மருத்துவ சுகாதாரப் பணிகளை கடுமையாக பாதிக்கக் கூடிய மசோதாவாகும். இதன்மூலம் மக்களின் அடிப்படை மருத்துவப் பணி, குடும்ப நல மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்படுகிற நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களின் வேலை நிறுத்த அறிவிப்பினால் பொதுமக்கள், நோயாளிகள் பாதிக்கப்படுகிற நிலை உருவாகியிருப்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

குடும்ப நல மற்றும் மருத்துவ சேவை அரசமைப்புச் சட்டத்தின்படி மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மசோதாவை கொண்டு வருவதன் மூலம் மத்திய அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் நீண்டகாலமாக செயல்பட்டு வந்த இந்திய மருத்துவ கவுன்சில் ஒழிக்கப்பட்டு, மத்திய பாஜக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பேர் கொண்ட தேசிய மருத்துவ ஆணையக் குழு அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் பெரும்பாலானவர்கள் மருத்துவர்கள் அல்லாதவர்களைக் கொண்டு நிரப்புவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த மசோதாவினால் ஆறுமாத பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மருத்துவம் படிக்காத டாக்டர்கள் அலோபதி சிகிச்சை செய்ய அனுமதிப்பதன் மூலம் போலி டாக்டர்களுக்கு அரசே அங்கீகாரம் அளிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது முறையாக மருத்துவ படிப்பு படித்து தேர்ச்சி பெற்ற டாக்டர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்துவதாகும்.

தனியார் கல்லூரிகளுக்கு 15 சதவீதம், அரசுக்கு 85 சதவீதம் இடஒதுக்கீடு இருந்த நிலையில் இந்த மசோதா நிறைவேறினால் 40 சதவீத இடஒதுக்கீடு அரசுக்கும், 60 சதவீத இடங்களை தனியார் கல்லூரிகளே நிரப்பிக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டு விடும். இதன்மூலம் மருத்துவப் படிப்பு வணிகமயமாக்கப்பட்டு தரமற்ற மருத்துவர்கள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறினால் மருத்துவத் துறை கடும் பாதிப்புக்கு உள்ளாகி, விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் தேசிய மருத்துவ ஆணையத்தை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் பயனாக ஏற்படுகிற பாதிப்புகளை மத்திய பாஜக அரசு உணர்ந்து போராட்டம் அறிவித்துள்ளவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்த பேச்சுவார்த்தை மூலம் கருத்தொற்றுமை ஏற்படுகிற வரை தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை நிலுவையில் வைப்பதற்கு மத்திய பாஜக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்படி எடுக்கத் தவறினால் நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள், மாணவர்கள் இணைந்து போராட்டம் நடத்தி பாஜக அரசுக்கு கடும் எதிர்ப்பு உருவாக நேரிடும்'' என திருநாவுக்கரசர் எச்சரித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x