Published : 14 Dec 2023 04:06 AM
Last Updated : 14 Dec 2023 04:06 AM
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து வீடுகளுக்கும் ப்ரீபெய்டு மின் மீட்டர் பொருத்தும் அரசின் செயலை கண்டித்து, அதிமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள், ப்ரீபெய்டு மின் மீட்டர்களை சாலையில் போட்டு உடைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
சோனாம்பாளையம் மின்துறை தலைமை அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலசெயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில அவைத் தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார். அதிமுகவினர் ஏராளமானோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஏழை எளிய மக்களை பாதிக்கும் ப்ரீபெய்டு மின் மீட்டரை பொருத்தக் கூடாது என்பதை அரசுக்கு வலியுறுத்தும் விதமாக, அந்த மின் மீட்டர்களை சாலையில் போட்டு உடைத்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
பின்னர் மாநில செயலாளர் அன்பழகன் பேசும்போது, “ப்ரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தால் மாணவர்கள், வீட்டிலிருந்து பணி செய்வோர் என பலரும் பாதிக்கப்படுவார்கள். மின்சாரம் மூலம் சிறு, குறு தொழில் புரியும் அனைவரும் உடனடியாக பாதிக்கப்படுவார்கள். செல்போன் இல்லாத ஏழை எளிய கிராமப் புறமக்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக மாறும். மின் கட்டணத்தை செலுத்துவதற்காகவே அனைவரும் செல்போன் வாங்க வேண்டும்.
ஏற்கெனவே நாம் செலுத்தி வரும் மின் கட்டணத்தில் கூடுதல் வரி, நிரந்தர சேவை கட்டணம், காலதாமத கட்டணம், சேவை கட்டணம், மின் விலை ஈடுகட்டுதல் என வட்டிக்காரர்கள் போல் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புதுச்சேரி மின்துறை தனியாருக்கு தாரை வார்க்கப் படுகிறது. மின்துறை அமைச்சர் நமச்சிவாயம், ‘இது எங்கள் அரசின் கொள்கை முடிவு’ என்கிறார்.
முதல்வரோ, ‘தனியார் மயமாக்கும் திட்டமில்லை’ என்கிறார். இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில், அரசு 15 முறை வாய்தா வாங்கியுள்ளது. ‘தனியார் மயமாக்கமாட்டோம்’ என நீதிமன்றத்தில் ஏன் அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. மக்கள் வேறு பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் போது, பல மக்கள் விரோத திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது.
புதுச்சேரி பாஜக கூட்டணி அரசு மக்கள் விரோத ஆட்சியை நடத்துகிறது. புதிதாக ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது அதன் மூலம் எத்தனை கோடி கொள்ளையடிக்கலாம் என்ற சிந்தனையுடன் சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் செயல்பாடு உள்ளது. படிப்பு முடித்த இளைஞர்களுக்கு வேலை வழங்காமல் மின்துறை, ஸ்மார்ட் சிட்டி, கல்வித் துறை என பல்வேறு துறைகளில் ஓய்வு பெற்ற முதியவர்களை கொண்டு பணியிடங்களை நிரப்பும் ஓய்வு பெற்ற முதியோர் ஆட்சி இங்கு நடைபெறுகிறது.
இந்த ஆட்சியில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், ஆளுநர் வாய்திறக்காமல் இருப்பது வெட்கக்கேடான செயலாகும்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்த எந்த திட்டமும் செயல் வடிவம் பெறவில்லை. மாறாக மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத திட்டங்கள் இங்கு திணிக்கப்படுகின்றன. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத மாநிலமாகவும், ரேஷன் கடைகள் மூடப்பட்டு பொது விநியோக திட்டமே இல்லாத புரட்சிகரமான மாநிலமாகவும் புதுச்சேரி உள்ளது. இவை அனைத்துக்கும் 2024 மக்களவைத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT