Published : 14 Dec 2023 04:08 AM
Last Updated : 14 Dec 2023 04:08 AM
புதுச்சேரி: புதுச்சேரி மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி, ப்ரீபெய்டு மின் மீட்டருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இது தொடர்பான மனுவை முதல்வரிடம் அளிக்கச் சென்றவர்கள், அதை அளிக்காமலேயே திரும்பிச் சென்றனர்.
புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்கும் முயற்சிக்கு பல்வேறு கட்சியினர், சமூக நல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, புதுச்சேரியில் ப்ரீபெய்டு மின் மீட்டர் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. அரசின் இச்செயலைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், புதுச்சேரி மக்களிடையே கடந்த சில நாட்களாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றன.
இதில், பொதுமக்கள் பலரிடம் கையொப்பம் பெற்றதை முதல்வரிடம் ஒப்படைக்கும் விதமாக நேற்று அக்கட்சி சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள பெரியார் சிலை அருகில் இருந்து புறப்பட்ட பேரணியில் கையெழுத்தியக்க ஆவணங்கள் தள்ளுவண்டியில் வைத்து கொண்டு வரப்பட்டன. முக்கிய வீதிகள் விழியாக வந்த பேரணி, மிஷன் வீதி வழியாக வந்த நிலையில், அங்கு போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் மாநில செயலர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ஜி. ராமகிருஷ்ணன், “புதுச்சேரி மாநிலத்தில் மின்துறையை தனியார் மயமாக்கும் வகையிலேயே ப்ரீபெய்டு மின் மீட்டர் பொருத்தப்படுகிறது. உணவு விடுதிகளில் ஒரே உணவை காலை, மாலையில் வெவ்வேறு விலைகளில், வெவ்வேறு பெயர்களில் விற்பதை ஏற்க முடியாது. அதுபோலத் தான் மின் கட்டணத்தையும் காலை, மாலை மற்றும் இரவு என நேரத்துக்கு தக்கபடி, புதிய புதிய சொற்களைப் பயன்படுத்தி உயர்த்தி வசூலிப்பதையும் ஏற்க முடியாது.
ப்ரீபெய்டு மின் மீட்டர் பொருத்துவதை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும். புதுச்சேரி ஆளுநர் அரசின் திட்டங்களுக்கு துணைபுரிவதை விட்டுவிட்டு, சட்டத்துக்குப் புறம்பாக தமிழக அரசை விமர்சித்து வருவது சரியல்ல. அவர் ஆளுநராக புதுச்சேரி மாநிலவளர்ச்சிக்கு துணைபுரிய வேண் டும்” என்றார்.
தொடர்ந்து ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் முதல்வர் ரங்க சாமியை சந்தித்து, ப்ரீபெய்டு மின் மீட்டருக்கு எதிராக பொது மக்களிடம் கையெழுத்து பெற்ற படிவங்களுடன் கூடிய மனுவை அளிக்க காத்திருந்தனர். ஆனால், தாமதமாக வந்த முதல்வர் அவர்களை உடனடியாக சந்திக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவர்கள் அங்கிருந்து மனு அளிக்காமலேயே திரும்பிச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT