Last Updated : 13 Dec, 2023 09:07 PM

 

Published : 13 Dec 2023 09:07 PM
Last Updated : 13 Dec 2023 09:07 PM

பல்கலை., கல்லூரிகளில் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு 

மதுரை: ‘மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் காலியாக உள்ள நிரந்தர ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உதவி பேரராசிரியராக பணிபுரியும் ரமேஷ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: “புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் உதவி பேரராசிரியராக பணிபுரிகிறேன். எனக்கு 16.09.2007 முதல் நிரந்தர உதவிப் பேராசிரியர்களுக்கு இணையான பணி மூப்பு, பணப்பலன் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி பட்டு தேவானந்த் பிறப்பித்த உத்தரவு: “பொதுவாக எந்தவொரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் கல்வி மிக முக்கியமான காரணியாக உள்ளது. குறிப்பாக, ஒரு நாட்டின் சமூக - பொருளாதார முன்னேற்றத்தில் கல்வி குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது. அனைத்து நிலைகளிலும் கல்வித் துறைக்கு அனைத்து வசதிகளையும் வழங்குவது பிரதான பணியாகும். கல்வி நிறுவன பணியிடங்களில் தகுதியான நபர்கள் நியமிக்கப்படாததால் மாணவர் சமுதாயம் பாதிக்கப்படுகிறது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.

கல்வி நிறுவனங்களில் தகுதியான நபர்களை ஆசிரியர்களாக நியமிக்கவில்லை என்றால், மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்காது. ஒவ்வொரு மாணவருக்கும் தரமான கல்வியை பெற உரிமை உண்டு. எனவே, மாணவர்களின் நலன் கருதி அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் காலியாக உள்ள நிரந்தர ஆசிரியர் பணியிடங்களை தகுதியான நபர்களை கொண்டு நிரப்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரரின் மனுவை பரிசீலிக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x