

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் வெடி மருந்துகளுடன் கைது செய்யப்பட்டவருக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால், போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சாத்தூர் அருகேயுள்ள குயில்தோப்பு என்ஜிஓ காலனியை சேர்ந்தவர் வெ. மோகன்ராஜ் (54). இவருக்கு மனைவி ராஜேஸ்வரி மற்றும் இரு மகள்கள் உள்ளனர். மோகன்ராஜின் வங்கிக் கணக்குகளில் லட்சக்கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படுவதாக மதுரை ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குத் தெரியவந்தது.
வெடி பொருள்கள் பறிமுதல்
இதையடுத்து, மோகன்ராஜின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்த காவல் உதவி ஆய்வாளர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீஸார், வெள்ளிக்கிழமை அதிகாலை அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அந்த வீட்டின் மாடியில் வெடி பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கிருந்த 3 கிலோ சல்பர், 10 கிலோ வெடி உப்பு, 1 கிலோ குப்ரிக், அரை கிலோ பசை மாவு, 6 கிலோ அலுமினிய பவுடர், 1 கிலோ டைட்டானியம், 1 கிலோ மணி மருந்து, 2 கிலோ இரும்புத்தூள், அரை கிலோ விபிசி பவுடர் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர்.
ரூ. 22 லட்சம் டெபாசிட்
மோகன்ராஜின் 4 வங்கிக் கணக்குப் புத்தகங்களையும் பறிமுதல் செய்து போலீஸார் ஆய்வு செய்ததில், ஒடிசா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து இவரது வங்கிக் கணக்குகளில் அண்மையில் சுமார் ரூ. 22 லட்சம் வரை டெபாசிட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கேள்வியெழுப்பிய போலீஸாரிடம், கருப்புப் பணம் என்று மட்டும் மோகன்ராஜ் பதில் கூறினாராம். மோகன்ராஜின் மனைவி ராஜேஸ்வரிக்கு எந்தத் தகவலும் தெரியவில்லையாம். கைது செய்யப்பட்ட மோகன் ராஜ் சிவில் பட்டயப் படிப்பு படித்தவர். கடந்த 2006-07 இல் முத்தாள்நாயக்கன்பட்டியில் ராஜேஸ்வரன் பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையை ஒப்பந்தத்துக்கு எடுத்து நடத்திவந்துள்ளார். நஷ்டம் ஏற்பட்டதையடுத்து அந்த ஆலையை மூடிவிட்டாராம். அங்கு மிச்சமடைந்த வெடி மருந்துகளை வீட்டின் மாடியில் வைத்திருந்ததாக விசாரணையில் மோகன்ராஜ் தெரிவித்தாராம்.
பட்டாசு ஆலை நஷ்டத்துக்குப் பிறகு, மோகன்ராஜ் கடந்த 2011-ல் புளூஸ்டார் பைரோ பாஃம் என்ற பெயரில் உரிமம் பெற்று வெடிமருந்து விற்பனை மையம் நடத்தி வந்ததும், அதன் பின்னரே அடுத்தடுத்து 4 வங்கிகளில் கணக்கு தொடங்கியதும், அடிக்கடி வட மாநிலங்களுக்குச் சென்று வந்ததும், ஆங்கிலம், இந்தி மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர் என்பதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட மோகன் ராஜ் சாத்தூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.