Published : 13 Dec 2023 04:54 AM
Last Updated : 13 Dec 2023 04:54 AM

உலகம் முழுவதும் வேதங்களை பரப்ப வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

மகரிஷி சாந்திபினி ராஷ்ட்ரிய வேத வித்யா பிரதிஷ்தான் மற்றும் யோகக்ஷேமா அறக்கட்டளை சார்பில் ‘வேத சம்மேளனம்' நிகழ்ச்சி சென்னை திருவல்லிக்கேணியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி.

சென்னை: வேதங்களின் தயாரிப்புதான் நம் பாரதம் என்றும், உலகளவில் வேதங்களைப் பரப்ப வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

வேதங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மகரிஷி சாந்திபினி ராஷ்ட்ரிய வேதவித்யா பிரதிஷ்தான் மற்றும் யோகக்ஷேமா அறக்கட்டளை இணைந்துநடத்தும் ‘வேத சம்மேளனம்' நிகழ்ச்சி சென்னை திருவல்லிக்கேணியில் நேற்று நடைபெற்றது. பிரதிஷ்தான் இயக்குநர் சஞ்சய் வஸ்தவா தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு கொடியசைத்து வேத சம்மேளனத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள், வேதங்களை ஓதியபடி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் மாடவீதிகளை வலம் வந்தனர்.

முன்னதாக நிகழ்வில் ஆளுநர்பேசியதாவது: கடவுள் படைப்புகளை உருவாக்கினார். அந்த படைப்புகளின் ஒவ்வொரு அங்கத்திலும் வேதங்கள் இருக்கின்றன. 1000 ஆண்டுகளுக்கு முன்பே உருவான வேதங்கள் மூலம் நித்திய அறிவை கொண்டு, ரிஷிகள் நாட்டை வழிநடத்தி சென்றிருக்கின்றனர். நமதுபாரதம் வேதங்களின் தயாரிப்பாகும். வேதங்கள்தான் நம் நாட்டின் தாய்.

நம் நாட்டில் எந்த சம்பிரதாயத்தைப் பின்தொடர்ந்தாலும் சரி, எந்த சம்பிரதாயத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருந்தாலும் சரிஅனைத்துக்கும் ஆரம்பம் வேதங்களாகத்தான் இருக்கும். அதிலிருந்துதான் நம் நாட்டின் பரிமாண வளர்ச்சி தொடங்கியது. பாரதம் மட்டுமின்றி உலகின் அனைத்து மக்களும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என வேதங்கள் சொல்கின்றன.

நாம் பல மொழிகளைப் பேசுகிறோம். பலவிதமான உடைகளை அணிகிறோம். நமது தொழில்கள் வேறுபடுகின்றன. காலநிலை இடத்துக்கு இடம் மாறுபடுகின்றது. இந்த வேறுபாடுகள் அனைத்தும்பார்ப்பதற்கு வேறுபாடுகளாகத் தெரியலாம். ஆனால் உண்மைநிலையைப் புரிந்து கொண்டவர்களுக்கு மற்றவர்களும் அவர்களை போலவேதான் தெரிவார்கள்.

மேற்கத்திய நாடுகள் அரசியல்,தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடைந்து விட்டதாகக் கருதுகிறோம். ஆனால் 18-ம் நூற்றாண்டு வரை உலகிலேயே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக வளர்ச்சியடைந்திருந்தது இந்தியாதான் என்பதை மறுக்க முடியாது. இரும்புதயாரித்தல், படகுகள் தயாரித்தலில் முதலிடத்தில் இருந்தோம். ஆனால் ஆங்கிலேயரின் வருகைக்குப் பின் அனைத்தும் மாறிவிட்டன.

நாம் வேதங்களில் இருந்து பிரிந்து விட்டோம். இன்று பாரதம்மீண்டும் எழுந்து கொண்டிருக்கிறது. விழித்துக் கொள்ளத் தொடங்கியுள்ளது.

நாம் யார் என்பதை உணரத்தொடங்கியுள்ளோம். நம்மால் உலகையே பாதுகாக்க முடியும். விரைவில் உலகையே வழிநடத்துவோம். இதற்காக வேதத்தை உலகமெங்கும் பரப்பிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் யோகக்ஷேமா அறக்கட்டளையின் அறங்காவலர் ஆராவமுதாச்சாரியார், ஜெயின் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுரேஷ்குமார் சஞ்செதி, கர்நாடகா சமஸ்கிருத பாடசாலா பள்ளியின் முதல்வர் பாண்டுரங்க புரோகித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x