Published : 13 Dec 2023 04:27 AM
Last Updated : 13 Dec 2023 04:27 AM
சென்னை: சென்னை வந்த மத்திய குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து சென்று, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்று ஆய்வு செய்யும் அவர்கள், முதல்வர் ஸ்டாலினை நாளை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டன.
மழை, வெள்ள பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்புமாறும் கேட்டுக்கொண்டார். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கடந்த 7-ம் தேதி சென்னைவந்து பாதிப்புகளை பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து, மழை,வெள்ள சேதத்தை ஆய்வு செய்ய, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய உள்துறை அமைத்தது. இதில், ஊரக வளர்ச்சி அமைச்சகத்தில் இருந்து திமான் சிங், மத்திய வேளாண் துறை இணை இயக்குநர் ஏ.கே.சிவ்ஹரே, மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் எஸ்.விஜயகுமார், மத்திய எரிசக்தி துறை துணை இயக்குநர் பவ்யா பாண்டே, மத்திய நிதி செலவின துறை சார்பில் ரங்கநாத் ஆடம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழுவினர் கடந்த 11-ம் தேதி இரவு டெல்லியில் இருந்து சென்னை வந்தனர். நேற்று காலை 10.35 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனாவை சந்தித்தனர். பிறகு, தலைமைச் செயலர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், மின்துறை தலைவர் ராஜேஷ் லக்கானி, துறை செயலர்கள் சந்தீப் சக்சேனா (நீர்வளம்), பிரதீப் யாதவ் (நெடுஞ்சாலை), சுப்ரியா சாஹூ (வனம்), பணீந்திரரெட்டி (போக்குவரத்து), மங்கத்ராம் சர்மா (கால்நடை பராமரிப்பு), கார்த்திகேயன் (நகராட்சி நிர்வாகம்) மற்றும் டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்பு, சேதங்கள், மீட்பு பணிகள் குறித்து இக்கூட்டத்தில் வீடியோ, படக்காட்சிகளுடன் விளக்கப்பட்டது. கூட்டம் பகல் 12.30 மணிக்கு முடிந்தது. பின்னர், மத்திய குழுவின் தலைவர் குணால்சத்யார்த்தி தலைமையில் 3 பேர் தென் சென்னை பகுதிக்கும், பவ்யா பாண்டே உள்ளிட்ட 3 பேர் வட சென்னைக்கும் ஆய்வுக்கு சென்றனர். தென்சென்னைக்கு சென்ற குழுவை சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடியும், வட சென்னைக்கு சென்ற குழுவை நகராட்சி நிர்வாகத் துறை செயலர் கார்த்திகேயனும் வழிநடத்தினர்.
தென் சென்னையில் வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, நாராயணபுரம் ஏரி, துரைப்பாக்கம், ஒக்கியம் மேடு, காரப்பாக்கம், கண்டிகை, கேளம்பாக்கம், மாம்பாக்கம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும், வட சென்னையில் படாளம், புளியந்தோப்பு, கொசப்பூர், பர்மா நகர் இருளர் காலனி, மணலி திடீர் நகர், சடையான்குப்பம் நெட்டுக்குப்பம் முகத்துவார பகுதிகளிலும் ஆய்வு செய்தனர். நேற்று காலை முதல் மாலை வரை ஆய்வு நடந்தது.
மத்திய குழு பாராட்டு: குழு தலைவர் குணால் சத்யார்த்தி கூறும்போது, ‘‘புயல், வெள்ளத்தாலும், மழைநீர் தேங்கியும்மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், மாநிலஅரசு அதிக பணிகள் மேற்கொண்டுள்ளதை பாராட்டுகிறேன். கடந்த 2015-ம் ஆண்டைவிட தற்போது, வெள்ள நீரை குறைப்பதற்கான வசதிகள் அதிகரித்துள்ளன. மின்சார வசதி, செல்போன் நெட்வொர்க் விரைவாக சரிசெய்யப்பட்டுள்ளன. அனைத்து கால்வாய்களும் நிறைந்து, நீர் உள்வாங்காத நிலையில்தான் பாதிப்பு ஏற்பட்டதுஎன்பதை அறிந்துள்ளோம். 3 நாள்கள ஆய்வை முடித்த பிறகு, பாதிப்பு குறித்த விவரங்களை பெற்று, விரைவில் அறிக்கை சமர்ப்பிப்போம்’’ என்றார்.
இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும்புதூர், குன்றத்தூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகின்றனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நாளை காலை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். பிறகு, டெல்லி புறப்பட்டு செல்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT