

நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருதைப் பெற்றுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து சொல்லியிருக்கிறார்.
இளையராஜா - வைரமுத்து நீண்டகாலமாக பேசிக்கொள்வதில்லை. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவும் நிலையில், நீண்ட காலத்துக்குப் பின்னர் இளையராஜாவுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், " பத்ம விருதுகள் பெறும் 85 இந்திய ஆளுமைகளுக்கும் என் வாழ்த்துக்கள். பத்ம விபூஷண் விருது பெறும் இளையராஜாவை
"காற்றின் தேசம் எங்கும் எந்தன் கானம் சென்று தங்கும்
வாழும் லோகமேழும் எந்தன் நாதம் சென்று ஆடும்
வாகை சூடும்… என்ற 'காதல் ஓவியம்' வரிகளால் வாழ்த்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
காதல் ஓவியம் படத்தில், 'பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்..' எனும் பாடலில் இந்த வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பாடல் மிகப்பெரிய ஹிட் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில், ஆண்டாள் சர்ச்சை காரணமாக வைரமுத்துவை பல்வேறு தரப்பினரும் சரமாரியாக வசைபாடினர். இந்நிலையில், திருப்பதிக்கு சென்ற இளையராஜாவிடம் வைரமுத்து சர்ச்சையில் சிக்கியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், வைரமுத்துவுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும்கூட அதை காரணமாக பயன்படுத்தி எதிர் கருத்து ஏதும் சொல்லாமல் மவுனமாக விலகிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.