

சென்னை: மத்திய அரசின் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என பாஜக மாநில ஊடகப் பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சித் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தினார்.
சென்னை, தியாகராய நகரில்உள்ள தமிழக பாஜக தலைமையகத்தில் மாநில ஊடகப்பிரிவு நிர்வாகிகள், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர்கள் கூட்டம், ஊடகப் பிரிவுதலைவர் ரங்கநாயகலு தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார்.
அவர் பேசும்போது, “ஆளுங் கட்சியின் தவறு, ஊழல் பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்து பேசுகின்றன. இதையும் நாம் செய்ய வேண்டும். அதே நேரம்,மத்தியில் ஆட்சியில் இருக்கும் நாம்செய்த நலத்திட்டங்களை மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டும். மக்களின் கருத்து, அவர்களின் தேவை குறித்து ஊடகப் பிரிவு கண்டறிய வேண்டும். மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இருந்துஎம்பி.க்களை அனுப்ப மகத்தானபங்காற்ற வேண்டும். மக்களுக்கும் கட்சிக்கும் பாலமாக இருக்க வேண்டியது ஊடகப் பிரிவின் கடமை. அதேபோல், ஊடகங்களுடன் நல்லதொரு நட்பைத் தொடரவேண்டும்” என்றார்.
கூட்டத்தில், பாஜக மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, நாராயணன் திருப்பதி, எம்.சக்கரவர்த்தி, மாநிலச் செயலர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.