லஞ்சம் வாங்கி கைதான அமலாக்கத் துறை அதிகாரியை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்டஅமலாக்கத் துறை அதிகாரி அன்கித் திவாரி. படம்: நா.தங்கரத்தினம்
திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்டஅமலாக்கத் துறை அதிகாரி அன்கித் திவாரி. படம்: நா.தங்கரத்தினம்
Updated on
1 min read

திண்டுக்கல்: அரசு மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான மதுரை அமலாக்கத் துறை அதிகாரிஅன்கித் திவாரியை விசாரிக்க, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு திண்டுக்கல் நீதிமன்றம் 3 நாட்கள் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிபவர் சுரேஷ்பாபு. இவர் மீது 2018-ல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், வருமானத்துக்கு அதிகமாக சொத்துசேர்த்ததாக வழக்குத் தொடர்ந்தனர். விசாரணை முடிந்து, துறை ரீதியான நடவடிக்கைக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை மீண்டும் எடுத்து அமலாக்கத் துறையினர் விசாரிக்காமல் இருப்பதற்காக, மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் ரூ.51 லட்சம் லஞ்சம் கொடுக்குமாறு மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அன்கித் திவாரி கேட்டுள்ளார்.

முதல் தவணையாக ரூ.20 லட்சம் கொடுத்த நிலையில், 2-வது தவணையாக ரூ.20 லட்சத்தை அன்கித் திவாரியிடம் மருத்துவர் சுரேஷ்பாபு கொடுத்தபோது, திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரால் அன்கித் திவாரி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, அன்கித் திவாரியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி, திண்டுக்கல் மாவட்ட முதன்மை நடுவர் நீதிமன்றத்தில், மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இதையொட்டி, மதுரை சிறையில் இருந்துஅன்கித் திவாரி அழைத்து வரப்பட்டு, முதன்மை நடுவர் நீதிமன்ற நீதிபதி மோகனா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

போலீஸ் காவலில் செல்ல அனுமதிக்கக் கூடாது என்று அன்கித் திவாரியின் வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். விசாரணை நடத்த 3 நாட்கள் போலீஸ் காவலில் அனுமதிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கறிஞர் வாதாடினார். இதையடுத்து, 3 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்த நீதிபதி, விசாரணையை முடித்து, வரும் 14-ம் தேதி மாலை 5 மணிக்குள் அன்கித் திவாரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.

தாயார் கண்ணீர்...: அன்கித் திவாரி நீதிமன்றத்தில் ஆஜராவதை அறிந்து மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இருந்து வந்த அவரது தாய், சகோதரர், உறவினர்கள் ஆகியோர் நீதிமன்ற வளாகத்தில் அன்கித் திவாரியை சந்தித்துப் பேசினர். மகனைப் பார்த்ததும் தாயார் கண்ணீர்விட்டு அழுதார். அருகில் நின்றிருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அவரை ஆறுதல்படுத்தினர். போலீஸ் விசாரணையின்போது, அன்கித் திவாரி வழக்கறிஞரைச் சந்திக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in