Published : 13 Dec 2023 06:10 AM
Last Updated : 13 Dec 2023 06:10 AM

மாத்திரையே இல்லாமல் இருதய துடிப்பை சீராக்கும் சிகிச்சை - கோவை அரசு மருத்துவமனையில் முதல்முறை

கோவை அரசு மருத்துவமனையில் முதல்முறையாக மாத்திரையே இல்லாமல் இருதய துடிப்பை சீராக்கும் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவ குழுவினருடன் மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா.

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் முதல்முறையாக மாத்திரையே இல்லாமல் நோயாளியின் இருதய துடிப்பை சீராக்கும் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையைச் சேர்ந்த லிங்ககுமார் (56), மாறுபட்ட அதிவேக இருதய துடிப்பால் கடந்த ஓராண்டாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவருக்கு இருதய படபடப்பு, மயக்கம், மூச்சுத் திணறல், சோர்வு போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டு வந்துள்ளன. அதிவேக இருதய துடிப்பை குணப்படுத்த உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாத்திரைகளை வழங்கியுள்ளனர். ஆனால், தொடர்ந்து மாத்திரைகள் உட்கொண்ட பின்னரும், இவருக்கு படபடப்பு குறையவில்லை. இதனால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 7-ம் தேதி லிங்ககுமார் அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா கூறியதாவது: இவ்வாறு பாதிப்பு உள்ளவர்களுக்கு ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 100 என்ற அளவில் இருதயம் துடிப்பதற்கு மாறாக, நிமிடத்திற்கு 150 முதல் 300 என்ற அளவில் இருக்கும். இதனால் இருதயம் வேகமாக துடித்து இருதய செயலிழப்பு மற்றும் இருதய ரத்த வெளியேற்றத்திறன் குறைந்து மூளை, சிறுநீரகம் பாதிப்படையும். எனவே, லிங்ககுமாருக்கு மின்னலை மூலம், இருதய செயல் திறனை ஆய்வு செய்து, துடிப்பை சீராக்கும் சிகிச்சை அளித்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த இருதயவியல் துறை மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி, இருதயவியல் துறை தலைவர் ஜெ.நம்பிராஜன், எலக்ட்ரோபிசியாலஜிட்கள் விக்ரம் விக்னேஷ், முத்தையா சுப்பிரமணியன், இருதயவியல் மருத்துவர்கள் டி.சக்கரவரத்தி ஜெ.ஜெகதீஷ், ஏ.என்.செந்தில் ஆகியோர் கொண்ட குழுவால் இதய செயல் திறனை ஆய்வு செய்து, துடிப்பை சீராக்கும் சிகிச்சை நேற்று வெற்றிகரமாக அளிக்கப்பட்டது.

ரூ.2.50 லட்சம் செலவாகும்: இந்த சிகிச்சைக்கு பிறகு, இருதய துடிப்பை சீராக வைத்திருக்க, நோயாளிக்கு மருந்து, மாத்திரைகள் தேவை இருக்காது. மேலும், மறுமுறை பாதிப்பு வராமலும் இருக்கும். கோவை அரசு மருத்துவமனையில் இவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சையை மேற்கொள்ள ரூ.2 லட்சம் முதல் ரூ.2.50 லட்சம் வரை செலவாகும். ஆனால், இங்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x