Published : 13 Dec 2023 06:17 AM
Last Updated : 13 Dec 2023 06:17 AM

நடுவீரப்பட்டில் ஏரிக்கரையை மர்ம நபர்கள் வெடி வைத்து உடைத்ததாக புகார்: அமைச்சர் அன்பரசன், ஆட்சியர் ஆய்வு

நடுவீரப்பட்டு: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் நடுவீரப்பட்டு ஊராட்சியில் 175 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. அண்மையில் பெய்தமழையால் இது முழு கொள்ளளவை எட்டி நிரப்பியது. இந்நிலையில், நேற்று ஏரியின் கரை உடைந்து தண்ணீர் வெளியேறியது. இதனால் பல ஆயிரக்கணக்கான கன அடி நீர் வெளியேறி அருகில்உள்ள குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்தது. சில வீடுகளிலும் தண்ணீர்புகுந்தது. அதேபோன்று 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களும் நீரில் மூழ்கின.

அதைத் தொடர்ந்து அங்கு வசிக்கும் பொதுமக்களை உடனடியாக வெளியேற்றி பாதுகாப்பான இடத்தில் மாவட்ட நிர்வாகம் தங்கவைத்தது. ஏரிக்கரையை சீரமைக்கும் பணியை ஒன்றிய நிர்வாகம் மேற்கொண்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்குவந்த தமிழக குறு, சிறு மற்றும்நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, எம்எல்ஏ செல்வப்பெருந்தகை ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் பாதுகாப்பு கருதி மின்சாரத்தை துண்டிக்க உத்தரவிட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கினர்.

இதுகுறித்து அமைச்சர் தா.மோ அன்பரசன் கூறுகையில், “ஏரி தானாகஉடைந்ததா அல்லது விஷமிகளின் செயலா எனக் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்தார். அப்பகுதி மக்கள் கூறுகையில், “நடுவீரப்பட்டு ஊராட்சியில் உள்ள பெரிய ஏரி, நடுதாங்கள் ஏரிகளில் 250-க்கும் அதிகமான ஆக்கிரமிப்பு வீடுகளைக் கட்டியுள்ளனர்.

இந்நிலையில் ஏரி நிரம்பியதால் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் ஆக்கிரமிப்பாளர்கள் ஏரி மதகை வெடி வைத்து உடைத்துள்ளனர். இதன் காரணமாக ஏரியிலிருந்து தண்ணீர் முழுவதுமாக வெளியேறியுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வருவாய்த் துறை,பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்குப் பலமுறை புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் காலம்தாழ்த்தி வருகின்றனர். இதனால்இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.எனவே ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரிக் கரையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x