Published : 13 Dec 2023 06:16 AM
Last Updated : 13 Dec 2023 06:16 AM

புதுச்சேரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை ஜனவரி முதல் ரூ.1,000 உயர்வு

புதுச்சேரியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் ஆவேசமாக பேசிய மாற்றுத்திறனாளிகளை சமாதானம் செய்யும் முதல்வர் ரங்கசாமி. | படம்: எம்.சாம்ராஜ் |

புதுச்சேரி: பட்ஜெட்டில் அறிவித்தப்படி மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.1,000 ஜனவரி மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி அரசின் சமூகநலத்துறை சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நேற்று நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது: நான் உங்களை மாற்றுத்திறனாளிகள் என அழைக்கமாட்டேன், சிறப்புத்திறனாளிகள் என்றுதான் அழைப்பேன். உங்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு நான் பக்கபலமாக இருப்பேன். பிரதமர் பாரா ஒலிம்பிக்ஸ்மூலம் பலரை ஊக்கப்படுத்தியுள்ளார். இதனால் 111 தங்கங்களை பெற்றுள்ளனர். சிறுவயதிலிருந்தே பாரா ஒலிம்பிக்ஸ் அனுப்பும் வகையில் முழுமையான பயிற்சியை அரசு அளிக்க வேண்டும். மத்திய அரசு சிறப்பு அடையாள அட்டை வழங்கி வருகிறது. புதுவை அரசு அதிகாரிகள் இந்த அட்டையை பெற்றுத்தர வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அரசு விழாவில் மாற்றுத்திறனாளிகள் ஆவேசம்: ஆளுநர் பேசி முடித்த பிறகு, மேடையில் சக்கர நாற்காலியில் இருந்த ஜகநாதன் என்பவர் ஆளுநரிடம் சென்று குறைகளைத் தெரிவித்தார். அருகில் முதல்வரும் நின்றிருந்தார். பின்னர் மேடையில் இருந்தவர்கள் பரிசளிப்பதால் அவரை அங்கிருந்து நகர்த்தினர். இதையடுத்து சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த நிர்வாகி வடிவேலு என்பவர் பேசுகையில், “ஏற்கெனவே கடந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகள் விழாவில் 25 சதவீதம் நிதிஉதவி உயர்த்தி வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதையே இன்னும் வழங்கவில்லை. ஓய்வூதியர்களை விட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை குறைவாக தரப்படுகிறது” என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். அவருக்கு ஆதரவாக சில மாற்றுத்திறனாளிகள் பேசினர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தினர்.

ஆளுநரும், முதல்வரும் பரிசளிக்கும்போது மாறறுத்திறனாளிகள் தொடர்ந்து குறைகளை சத்தமாக தெரிவித்தபடியே இருந்தனர். ஒரு கட்டத்தில் போலீஸார் அவர்களை மறைத்தபடி மேடையில் நின்றனர். விழா முடிந்த பிறகு முதல்வர் ரங்கசாமி அவர்களிடம் சென்று, அலுவலகத்துக்கு வருமாறு கூறிவிட்டு புறப்பட்டார். முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி 23 மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில விருது, சான்றிதழ்களுடன் ரூ.10 ஆயிரம் வழங்கி பேசியதாவது: புதுவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகாலத்தோடு வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை அரசு மிகுந்த கவனத்தோடு செயல்படுத்தி வருகிறது. சில திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருக்கலாம். அவற்றையும் அரசு செயல்படுத்தும். உதவியாளர் பணியிடம் விரைவில் நிரப்பப்படும். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படும். தேர்வுகளில் பங்கேற்று இடஒதுக்கீட்டை மாற்றுத்திறனாளிகள் பெறுவது அவசியம். சட்டப்பேரவையில் தெரிவித்தபடி வரும் ஜனவரி முதல் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.1,000 உயர்த்தி வழங்கப்படும். 40 சதவீத ஊனமடைந்தவர்களுக்கும் அரசு நிதியுதவி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x