Published : 12 Dec 2023 09:34 AM
Last Updated : 12 Dec 2023 09:34 AM

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் திருத்தப்பட்ட விதிகளின்படி நிவாரணம் அறிவிப்பு

சென்னை: மத்திய அரசு பேரிடர் பாதிப்பு நிவாரணம் தொடர்பான விதிமுறைகளை மாற்றியமைத்துள்ள நிலையில், அதனை தமிழக அரசு ஏற்றதையடுத்து அதன் அடிப்படையில் மிக்ஜாம் புயலுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மனித உயிர் இழப்பு, படகு சேதம் போன்றவற்றுக்கு மாநில அரசு கூடுதல் நிதியும் சேர்த்து வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புயல், வெள்ளம், சுனாமி போன்ற பேரிடர்களின் போது பொதுமக்கள் மற்றும் அவர்களின் உடமைகளுக்கு பாதிப்பு ஏற்படும்போது, நிவாரணம் அளிப்பதற்கான விதிமுறைகள் மத்திய அரசால் வகுக்கப்பட்டுள்ளன. தேசிய மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதி வழங்கப்படுகிறது. தற்போது நிதி வழங்குவதற்கான இந்த விதிகளை மத்திய அரசு திருத்தியுள்ளது. இந்த அடிப்படையில் தற்போது மிக்ஜாம் புயலுக்கான நிவாரண நிதி தமிழக அரசால் வழங்கப்படுகிறது. அதே நேரம், மாநில அரசுக்கு வழங்கப்பட்ட வழிமுறை அடிப்படையில், கூடுதல் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக வருவாய்த்துறை செயலர் ராஜாராமன் வெளியிட்ட அரசாணை: மத்திய அரசின் திருத்திய நிவாரண நிதி விதிமுறைகள் அடிப்படையில், எந்த பாதிப்புக்கு எவ்வளவு நிதியுதவி என்பதற்கான பட்டியலுடன், அதனை வழங்கும் வழிமுறைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் அரசுக்கு பரிந்துரைத்தார். இதை பரிசீலித்த தமிழக அரசு, பரிந்துரைகளை ஏற்றுள்ளது.

இதுதவிர, மத்திய அரசு வகுத்துள்ள திருத்தப்பட்ட விதிமுறைகள், தமிழக அரசு ஏற்கெனவே பின்பற்றும் விதிமுறைகளில் எது மக்களுக்கு கூடுதல் பயன் தரும் என்பதை ஆய்வு செய்து அதை பின்பற்ற உத்தரவிடப்படுகிறது. இதன்படி, திருத்தப்பட்ட விதி அடிப்படையில், இந்த 2023-24-ம் நிதியாண்டில் நிவாரணம் வழங்கப்படும்.

இதன்படி, நிவாரணப்பணி அல்லது முன்னெச்சரிக்கை பணியில் இறந்தவர்கள் உட்பட பேரிடரில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம், 40 முதல் 60 சதவீதம் உடல் உறுப்பு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் ஒரு உறுப்புக்கு ரூ.74 ஆயிரம், 60 சதவீதத்தை தாண்டி பாதிப்பு இருந்தால் ரூ.2.50 லட்சம், மருத்துவமனையில் ஒரு வாரத்துக்கு மேல் சிகிச்சை பெறும் அளவுக்கு கொடுங்காயம் என்றால் ரூ.16 ஆயிரம், ஒரு வாரத்துக்கு குறைவாக மருத்துவமனையில் இருந்தால் ரூ.5,400 வழங்கப்படும்.

ஆடைகள், பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருட்கள் முழுமையாக அடித்து செல்லப்பட்டால், உடைகளுக்கு ரூ.2,500, வீட்டு உபயோகப் பொருட்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும். குடும்ப வாழ்வாதாரம் பாதிப்புக்கு ஏற்கெனவே உள்ள விதிகள்படி கணக்கிட்டு நிவாரணம் அளிக்கப்படும்.

எருமை, பசு இழப்புக்கு ரூ.37,500, ஆடு, பன்றிக்கு- ரூ.4 ஆயிரம், ஒட்டகம், குதிரை, காளை மாடு -ரூ.32 ஆயிரம், கன்று, கழுதை - ரூ.20 ஆயிரம், கோழி இறந்தால் ஒன்றுக்கு ரூ.100 நிவாரணமாக வழங்கப்படும். தொலைந்துபோன அல்லது முழுவதும் சேதமான கட்டுமரம்- ரூ.50 ஆயிரம், பகுதி சேதம் என்றால் - ரூ.15 ஆயிரம், பகுதியாக சேதமான எப்.ஆர்.பி. வல்லம்- ரூ.30 ஆயிரம், மீன்பிடி வலை முழுமையான சேதம்- ரூ.15 ஆயிரம், கைவினைக் கலைஞர்களின் உபகரணங்கள் சேதம்- ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்.

சமவெளிப்பகுதியில் வீடு முழுமையாக சேதம்- ரூ.1.20 லட்சம், பகுதிசேதம்- ரூ.6,500; மலை பிரதேசத்தில் வீடு - ரூ.1.30 லட்சம், பகுதி சேதம்- ரூ.4 ஆயிரம், கால்நடை கொட்டகை- ரூ.3 ஆயிரம், அழிந்துபோன குடிசை- ரூ.8 ஆயிரம் மற்றும் குடும்பத்துக்கு 10 கிலோ அரிசி, சேதமடைந்த பள்ளியை சீரமைக்க ரூ.2 லட்சம் என நிவாரணத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, இந்த நிவாரணத்தை தாண்டி கூடுதல் நிவாரணம் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், மிக்ஜாம் புயல் நிவாரணத்தில் தமிழக அரசைப்பொறுத்தவரை மனித உயிர் இழப்புக்கு ரூ.5 லட்சம் மற்றும் படகு இழப்பு, வேளாண் பயிர்கள் இழப்பு போன்றவற்றுக்கு ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட நிவாரணத்தை விட கூடுதலாக நிவாரணம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x