Published : 12 Dec 2023 06:15 AM
Last Updated : 12 Dec 2023 06:15 AM
மதுரை: குரூப்-4 பணியிடங்களுக்கு தேர்வானோர் பட்டியலை ஜன.8-க்குள் இணையதளத்தில் வெளியிட, டிஎன்பிஎஸ்சி-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கண்மணி, கீதா, முத்துலட்சுமி உள்ளிட்ட பலர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு மார்ச் 30-ம் தேதி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்தத் தேர்வில் நாங்களும் பங்கேற்றோம். தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலில் எங்கள் பெயர் இல்லை. தேர்வில் எங்களுக்கு 255 மதிப்பெண் கிடைக்க வாய்ப்புள்ளது.
குரூப்-4 தேர்வில் விடைத்தாள் மோசடி நடைபெற்றுள்ளது. இதனால் எங்களுடைய விடைத்தாள் நகல் கேட்டு. உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தோம். நீதிமன்றம் உத்தரவிட்டதால், எங்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கப்பட்டது. இதை ஆய்வுசெய்தபோது, நாங்கள் அதிககேள்விகளுக்குப் பதிலளித்துள் ளோம். பணிக்கு தேர்வாகும் அளவுக்கு எங்களுக்கு மதிப்பெண் வருகிறது. இருப்பினும், எங்களுக்கு பணி கிடைக்கவில்லை.
எனவே, வழக்கறிஞர் ஆணையரை நியமித்து, எங்களது விடைத்தாளையும், இறுதி விடைப்பட்டியலையும் ஒப்பிட்டு சரியான மதிப்பெண் வழங்கவும், எங்களுக்கு குரூப்-4 பணி வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில்கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஆர்.விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. டிஎன்பிஎஸ்சி தரப்பில், மனுதாரர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கப்பட்டு விட்டது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, குரூப்-4பணியிடங்களுக்கு தேர்வானவர் களின் பட்டியலை ஜன.8-க்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும். மனுதாரர்களைக் காட்டிலும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள், தேர்வானவர்கள் பட்டியலில் இருந்தால், மனுதாரர்கள் நீதிமன்றத்தை நாடலாம். எனவே இந்த மனு முடித்து வைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT